வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்களான 6 வயது மற்றும் 2 வயதான குழந்தைகளே இவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற வேண்டும் என்று குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டிருப்பததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால், இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
6 வயதான பிருந்தா, 2 வயதான கிருஷாந்த் ஆகிய இரண்டு குழந்தைகளுமே இவ்வாறு தாக்கப்பட்டு இராணுவ சப்பாத்து காலினால் மிதிக்கப்பட்டதாகவும் நாடடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழோசையிடம் கூறினார்.
இரண்டு குழந்தைகளும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகளின் வீட்டருகில் தையல் கடை வைத்திருப்பவரான மாமா முறை உறவினர் ஒருவர் குழந்தைகள் தாக்கப்பட்ட காரணத்தைக் கேட்டபோது, அவரையும் அந்தச் சிப்பாய் தலையில் தடியாலும் வாளி ஒன்றினாலும் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் சிறிதரன் கூறினார்.
அவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற இராணுவ அடக்குமுறையின் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இவ்வாறு சிறுவர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ள போதிலும் அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சிறிதரன், இது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பினரதும் காவல்துறையினரதும் கருத்துக்களை உடனடியாக அறிய முடியவில்லை.
No comments
Post a Comment