Latest News

January 28, 2015

முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
by admin - 0


முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 24ம் திகதி உருத்திரபுரம் கிழக்கு சாயி முன்பள்ளி நிகழ்வில் இராணுவப் படையணிக் கொடியேற்றப்பட்டு இராணுவத்தின் அத்துமீறிய பிரசன்னம் குறித்தும் முன்பள்ளி ஆசிரியர்களின் சுதந்திரமான கற்பித்தல் செயற்பாடுகள், ஊதியம் போன்ற விடயங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதன் விபரம் வருமாறு,

2015.01.28
மாண்புமிகு ஜனாதிபதி. 
கௌரவ மைத்திரிபால சிறிசேன, 
ஜனாதிபதி செயலகம், 
கொழும்பு. 

ஐயா! 

சிவில் பாதுகாப்புப் பிரிவிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல்

இலங்கை நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட தங்களுக்கு, எழுபது ஆண்டுகளுக்கு மேல் நீதி வேண்டிப் போராடும் தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் என் வாழ்த்துக்கள். 

தங்களுடைய காலத்திலாவது தமிழ்த் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்துடன் தமிழர்களுடைய வரலாற்று ரீதியான, சரித்திர பூர்வமான நிலத்தில் தமிழர்களுக்கு உரித்தான இறைமையின் அடிப்படையில், நிலையான தீர்வைப் பெற்று இலங்கை நாட்டின் இணைப்பங்காளிகளாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு வழி சமைப்பீர்கள் என்று எனது மக்கள் சார்பாக எதிர்பார்க்கிறேன். 

அந்த எதிர்பார்ப்பும் மாற்றம் வேண்டிய முயற்சியும் தான் தமிழர் வரலாறு காணாத வகையில் திரண்டு வந்து தங்களை இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது. அந்த முயற்சிக்கும், உழைப்பிற்கும் தாங்கள் நல்லெண்ணத்துடன் உழைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழ்வரும் விடயத்தினையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறேன். 

கடந்த சில ஆண்டுகளாக இந்தநாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முகாமைத்துவப் பயிற்சி  என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இராணுவத் துன்புறுத்தல்களையும்  எல்லை மீறிய பயிற்சியினையும் தாங்கள் உடன் நிறுத்தியமைக்கும் தேசிய பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பதவிகளை மீளப்பெற்றமைக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். 

வடக்கு கிழக்கிலே குறிப்பாகக் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பள்ளி செல்லும் 3-4வயதுப் பாலகர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புப்பிரிவு என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு இராணுவக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகிறார்கள். 

இராணுவம் கொடுக்கும் நீலநிறப் புடவையைத்தான் அவர்கள் அணியவேண்டுமென எனக் கட்டாயப்படுத்தியுள்ளார்கள். 

அதேபோல் அந்தப் பச்சிளம் பாலர்களும் இராணுவம் சொல்லும் நிறத்தில் தான் தங்கள் உடைகளை அணிய வேண்டும். 

இவ்வாசிரியர்கள் மாதம் இரு தடவை விசுவமடு இராணுவ முகாமுக்கு அழைக்கப்படுவதும், அங்கு அரசியல் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும், யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தப்பட்டமையும், மேஜர் ஜெனரல் ரட்ணப்பிரிய அவர்களின் கட்டளையின் கீழ் நடைபெற்ற விடயங்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

விசேடமாக சின்னஞ்சிறு வயதுப் பாலர்கர்களைப் பராமரிக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இலங்கை நாட்டில் ஒருதகுந்த கல்விமுறை இல்லை என்பது வேதனையானது. 

இலங்கையின் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு மாகாணங்களிலும் முன்பள்ளிகளுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் வலய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களையும் புறம் தள்ளி துப்பாக்கிகளுடனும் இராணுவச் சீருடையுடனும் இராணுவத்தினரே நேரடியாக இந்த முன்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இராணுவ ரீதியாக நடத்துகிறார்கள். 

வடக்கு மாகாண சபை இருந்தும் கூட இம்முன்பள்ளிகள் ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருப்பது, தாங்களும் நாங்களும் நேசிக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான விடயமாகும். 

தாங்கள் தயவு கூர்ந்து இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துப் பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் சிவில் பாதுகாப்பபுப் பிரிவின் ஊடாக இருபத்தோராயிரம் ரூபா(21இ000ஃஸ்ரீ) சம்பளம் வழங்கப்படும் இம்முன்பள்ளி ஆசிரியர்களை மாகாணக்கல்வி அமைச்சின்கீழ் விடுவித்து இதே சம்பளத்தைக் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து பெறக்கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். 

அத்துடன் இராணுவச்சீருடைகளுடனும் துப்பாக்கிகளுடனும் இராணுவத்தினர் பாடசாலைகளிலும், முன்பள்ளிகளிலும், பிரவேசிப்பதைத் தடுக்க வேண்டும். 

ஏனெனில் இப்பச்சிளம் பாலகர்களிடம் துப்பாக்கிகளில் இராணுவப் பிரசன்னங்கள் தொடர்பான பயந்த மனநிலையினை மாற்ற வேண்டும். அத்தகைய சூழலே ஆரோக்கியமான கல்விச் செயற்பாட்டிற்கும், அச்சமற்ற எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும். எனவே இராணுவத்தினர் கல்விமற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

2015.01.24ம் திகதியன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரம் கிழக்கு சாயிமுன்பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் அத்துமீறிக் கலந்து கொண்ட இராணுவத்தினர் தேசியக் கொடியோடு இராணுவப் படையணிக் கொடியை ஏற்றிய படங்களைத் தங்களின் மேலான கவனத்திற்கு இக்கடிதத்துடன் அனுப்பி வைக்கின்றேன். 

எனவே தயவு செய்து இந்தநாட்டின் முதல் மனிதன் என்ற வகையில் இலங்கையிலே எங்குமே இல்லாத இந்த முன்பள்ளிகள் மீதான இராணுவச் செயற்பாட்டினை நிறுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் இதேசம்பளத்துடன் மாகாண அரசினது கல்வி அமைச்சின் கீழ் செயற்படத் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றேன். 

நன்றியுடன், 
சி.சிறீதரன். 
பாராளுமன்ற உறுப்பினர், 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், 
கிளிநொச்சி

« PREV
NEXT »

No comments