பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார்.
நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர்.
சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார். ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார்.
இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
மூன்றாவது சந்தேக நபர் தான் சம்பவம் நடந்த போது வேறு இடத்தில் இருந்ததாகக் கூறி சரணடைந்திருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இதனிடையே, பாரிஸுக்கு தெற்கே இன்று வியாழன் காலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்திருப்பதாக பிரெஞ்சு போலிசார் கூறினர்.
இதில் ஒருவர் போலிஸ் அதிகாரி என்றும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸெனெவு, இந்த தாக்குதலை நடத்தியர் இன்னும் பிடிபடவில்லை என்று கூறினார். இந்த சம்பவமும் நேற்று பாரிஸில் நடந்த சம்பவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.
பிரான்ஸில் 'சார்லி எப்தோ' இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்சின் பல பகுதிகளில் பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்சில் நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாரிசுக்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது.
பிரான்சில் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்துக்கு எதிரான எதிர்தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று அஞ்சுவதாக சில முஸ்லீம் பிரமுகர்கள் கூறியிருக்கின்றனர்.
இதனிடையே, பிரான்சில் , நேற்று பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் முகமாக, தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. நண்பகலில் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படும். நோத்ர டேம் தேவாயலயத்தின் மணிகள் முழங்கும்.
நேற்றிரவு, பல்லாயிரக்கணக்கானோர் பிரான்ஸ் நெடுகிலும் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர். பிரான்ஸில் முஸ்லீம் தலைவர்கள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். உலகெங்கும், பல தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இது ஒரு வர்ணிக்க முடியாத கொடூரம் என்று கூறினார். சிட்னியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலை ஒப்புமை காட்டிப் பேசிய அவர், இஸ்லாமிய அரசு அமைப்பு உலகின் மீது போர் தொடுத்திருக்கிறது என்றார்.
மலேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசேன் இந்தக் கொலையாளிகள் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றார்.
ஆனால் இரானின் பிரஸ் டிவி ஊடகம் வேறு மாதிரியான கருத்தை வெளியிட்டது.
பிரான்ஸில் அதிகரித்துவரும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துணர்வு குறித்து பிரெஞ்சு அரசு கடைப்பிடித்துவரும் மௌனம்தான் நாட்டின் முஸ்லீம்கள் தாங்கள் அந்நியப்படுவதாக உணர்வதற்குக் காரணம் என்று அது கூறியது.
Social Buttons