Latest News

January 29, 2015

கே.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!!
by Unknown - 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதனிடம் இதுவரை இலங்கை அரசு நடத்திய விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் ஜே.வி.பி. சார்பில் அண்மையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன். அவர் மீது முந்தைய மகிந்த ராஜபக்சே அரசு எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கே.பி. மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் போது அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அவர் எப்படி கிளிநொச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பணம், தங்கம், கப்பல்கள் ஆகியவற்றை மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் கே.பி. ஆகியோர் பகிர்ந்து கொண்டார்களா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சிவில் வாழ்க்கையில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கே.பி.க்கு புனர்வாழ்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஜே.வி.பி. தமது மனுவில் தெரிவித்திருந்தது. இம்மனுவை நேற்று விசாரித்த இலங்கை நீதிமன்ற நீதிபதிகள் விஜித மலல்கொட மற்றும் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் ஆகியோர், கே.பி. விவகாரம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் பிப்ரவரி 5-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

« PREV
NEXT »