Latest News

January 24, 2015

கோட்டாபய வங்கிக் கணக்கு, ஓர் அரசியலமைப்பு மீறல்!
by Unknown - 0

இலங்கையில் அரச பொது நிதிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் பணத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்தப் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடந்துவருகின்றன.

புதிய இராணுவத் தலைமையகத்தை அமைப்பதற்காக இந்தப் பணத்தை தனது பெயரில் உள்ள கணக்கில் வைத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார்.

இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை விற்றதில் கிடைத்த இந்தப் பணத்தை தனது பெயரில் இருந்த கணக்கில் வைத்திருப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

எனினும் அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று இலங்கையின் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் எஸ்.சி. மாயாதுன்னே பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, நாட்டின் நிதியை கையாள்கின்ற முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாகவும் எஸ்.சி. மாயாதுன்னே கூறினார்.

'அரசியலமைப்பின் 149-(1)- இன் படி, அரசுக்கு வருகின்ற எந்தவொரு வருமானமும் கருவூலத்தின்- அதாவது திறைசேரியின் பொது நிதியத்தில் சேரவேண்டும்' என்றார் முன்னாள் கணக்காய்வாளர் எஸ்.சி. மாயாதுன்னே.

'அமைச்சரவையின் அனுமதி செல்லாது'

நாடாளுமன்றத்தால் வழங்கப்படுகின்ற சிறப்பு அனுமதியின் பிரகாரம் மட்டுமே வேறு கணக்குகளில் அரச நிதியை வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

'...இங்கு இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அப்படியான அனுமதியைக் கொடுத்திருக்காவிட்டால், அரசுக்கு வரவேண்டிய பணத்தை வேறு கணக்கில் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்' என்றார் மாயாதுன்னே.

'அமைச்சரவையினால் இந்த அனுமதியைக் கொடுக்கமுடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த அனுமதியின்படி வேறு ஒரு நிதியத்தின் கீழோ அல்லது கணக்குக்கோ இந்தப் பணத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். இல்லாவிட்டால் இந்த எல்லாப் பணமும் பொது அரச நிதியத்தின் கீழேயே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் சட்டம். அதனை மீறுவது அரசியலமைப்பு மீறல்' என்றும் கூறினார் முன்னாள் தலைமை கணக்காய்வாளர்.

'நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்துக்கு முரணாக செயற்படுவதற்கு அமைச்சரவையால் முடியாது. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின்படி, நீதிமன்றத்தின் ஊடாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும்' என்றார் மாயாதுன்னே.

வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் பெறும்போதும் நாடாளுமன்றத்தின் அனுமதியை அரசாங்கம் பெறுவது அவசியம் என்றும் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் சுட்டிக்காட்டினார்.

'குறிப்பாக, அரசு கடன் மற்றும் உதவிகளைப் பெறும்போதும் நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம். இந்த அனுமதியின்றி பல பில்லியன் கணக்கான கடன் நிதி கையாளப்பட்டிருப்பதாகத் தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதனால், அரசியலமைப்புக்கு உட்படாத வகையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் நடந்துள்ளன என்பதை மறுக்கமுடியாத நிலை தான் இங்கு இருக்கின்றது' என்றும் கூறினார் அவர்.

2000ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கையின் 36-வது தலைமை கணக்காய்வாளராக எஸ்.எம். மாயாதுன்னே பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி bbc tamil 
« PREV
NEXT »