புதிய அரசாங்கத்திற்கு ஜே.வி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒருவார காலம் கடந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்த நேரிடும் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
நாள் தோறும் கடந்த அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிராக பாரியளவில் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் பிரதான விமான நிலையத்தின் ஊடாகவே நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள ஆலோசனை சபைக் கூட்டத்தில் தொடர்ச்சியாக ஜே.வி.பி இது குறித்து கேள்வி எழுப்பும் என அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பணத்தைச் சுரண்டிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புதிய அரசாங்கத்திற்கு மக்களுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கப் போவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
Social Buttons