Latest News

January 25, 2015

14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் கைது
by admin - 0



சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கிய மணிப்பூர் மாநில இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா இன்று கைது மீண்டும் செய்யப்பட்டு, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார்.

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000–ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இம்பால் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐரோம் ஷர்மிளா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிபதி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

இதனையடுத்து, நேற்றிரவு சிறையில் இருந்து விடுதலையான ஐரோம் ஷர்மிளா இம்பால் நகரில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து உண்ணாநிலையை மேற்கொண்டு வந்தார். 

அவரை பழையபடி ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறிய போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்ளவும் ஷர்மிளா மறுத்து விட்டார். நேற்றிரவு 9 மணியளவில் அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, மணிப்பூர் போலீசார் ஷர்மிளாவை பூரம்பட் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

ஐரோம் ஷர்மிளாவை கைது செய்யவில்லை என்றும் அவரது உயிரை காப்பாற்றவே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாகவும் அவரது ஆதரவாளர்களிடம் போலீசார் தெரிவித்தனர். எனினும், சொன்ன வாக்குறுதியை காப்பாற்றாத போலீசார், இன்று பிற்பகல் அவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்குரிய சட்டம் என்ற சட்டப்பிரிவையே நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி குற்றச்சாட்டை சுமத்தி, மீண்டும் கைது செய்து காவலில் அடைத்துள்ள போலீசாரின் செயலானது நாட்டின் சட்ட அமைப்பையே கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது என அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments