இந்தியாவுடனான உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவும்-இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறிவருவதை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தின.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுடனான கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரதமர் நரேந்திரமோடிக்கு, சீன பிரதமர் லீ கீகியாங் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான அம்சங்களில், இன்னும் அதிக ஒத்துழைப்போடு இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன நாட்டு பத்திரிகைகள், அமெரிக்காவுடன், இந்தியா நட்பாக இருப்பது நல்லதல்ல என்று கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. சீனாவில் வெளியாகும் குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு முன்னணி பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "சீனா-இந்தியா இடையேயான பிரச்சினைகளை இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் இந்தியா நட்புறவு கொள்வது நல்லதல்ல. அமெரிக்கா பின்னியுள்ள சதி வலையில் இந்தியா விழுந்துவிடக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனும், இலங்கையுடனும் சீனா நட்புறவு கொண்டு, சார்க் நாடுகளை உடைக்க முற்பட்டுவருகிறது. எனவே அமெரிக்காவை வைத்து பூச்சாண்டி காட்டும் நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் தெற்காசியாவின் முக்கியமான நாடான இந்தியாவுடன் அமெரிக்கா நட்புநாடானால், அது சீனா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஆபத்தாக முடியும் என்று அஞ்சுகிறது சீனா.
எனவே தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவருவதற்கு சீனா தயாராகியுள்ளது. இவ்வார இறுதியில் சீனாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது சீனாவுடன் நட்பை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Social Buttons