சிட்னியில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியா – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி எஸ்.சி.ஜி. மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அபாரமான விளையாடி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 572 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அடக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் திணறியது. ஆடுகளம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக இருந்ததால், அவுஸ்திரேலியர்கள் அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 25 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ரோஹித் சர்மா 40 ஓட்டங்களுடனும், லோகேஷ் ராகுல் 31 ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அவுட் ஆனார். அவர் 53 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் லயோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தில் இருந்த லோகேஷ் ராகுல் அணித்தலைவர் கோஹ்லியுடன் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி இந்திய அணியை சற்று வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.
லோகேஷ் ராகுல் பொறுப்பாக ஆடி சதம் அடித்தார். தேநீர் இடைவேளை வரையில் இந்திய அணி 80 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் ஆடிய லோகேஷ் ராகுல் 110 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரஹானே, அணித்தலைவர் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய கோஹ்லியும் சதம் அடித்தார்.
13 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ரஹானே வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய ரெய்னா தான் சந்தித்த முதல் பந்திலே டக்- அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால் இந்திய அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன. விக்கெட் கீப்பர் சகா14 ஓட்டங்களுடனும், கோஹ்லி 140 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Social Buttons