முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற ஊழல் மோசடி மற்றும் அதிகாரத்துஷ்பிரயோகங்களை உரிய முறையில் விசாரிப்பதற்கு விஷேட உள்ளூர் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அவர் ஒத்துழைத்தால் அவரது ஊழல் மோசடிகளையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் நிரூபிக்க முடியும் என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயாரென்றால் அந்த பொறிமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை மும்மொழிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் (18.01.2015) அதன் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் “நான் எனது ஆட்சிக்காலத்தில் ஏதாவது அதிகார துஷ்பிரயோகங்களை, ஊழல் மோசடிகளை செய்திருந்தால், அதனை முடிந்தால் சிப்லி, முபீன், அப்துர் ரஹ்மான், மர்சூக் எவராவது நிருபிக்கட்டும் எனவும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் தருவேன் எனவும்” முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கருத்து வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வரலாற்றில் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவரது அரசியல் எப்படிப்பட்டது அரசியலில் அவர் நடந்து கொண்ட விதம் எப்படியானது என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
ஆனால் அவர் “நான் ஒரு துளியும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை. சிறிதளவும் ஊழல் செய்யவில்லை.” என கூறுகின்றார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அதிகார துஸ்பிரயோகம் என்றால் என்ன? அரசியல் பழிவாங்கல் என்றால் என்ன? ஊழல் மோசடி, பொதுச் சொத்துக்களை சுரண்டுதல் என்றால் என்ன? என்பது தொடர்பில் வரைவிலக்கணத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன், அது தெரியாததன் காரணமாக, தான் செய்கின்ற ஊழல் மோசடிகளை, ஊழல் மோசடியில்லை என்றும் தான் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்தினை அதிகார துஷ்பிரயோகம் இல்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
சட்டத்திலுள்ள ஓட்டைகளை வைத்துத்தான் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் தமது குற்றங்களில் இருந்து மிக இலேசாக தப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கும் இது தொடர்பில் ஏற்கனவே நாங்கள் தகவல்களை வழங்கியுள்ளோம், அதற்கு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அதிகாரத் துஷ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகள் தொடர்பில் உடனடியாக நிரூபிப்பதற்காக மூன்று விடயங்களை கூறி வைக்க விரும்புகின்றோம்.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்ற செலிங்கோ புறபிட் செயரிங் விடயம் இருக்கிறது, அவர் ஒத்துழைத்தால் அதை விசாரணை செய்யும்போது அதற்கான ஆதாரங்களை முன் வைப்போம்.
மற்றது, ஊழல் மோசடிகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்ற குவைட் சிற்றி வீட்டுத்திட்ட விவகாரத்தை நாங்கள் காட்ட முடியும்.
அடுத்து, காத்தான்குடி நகர சபையில் அவரது அரசியல் அதிகார தலைமைத்துவத்தில் நடந்திருக்கின்ற அரசியல் துஷ்பிரயோகங்கள் ஊழல் மோசடிகளை அவர் ஒத்துழைத்தால் நாங்கள் நிரூபித்துக் காட்ட முடியும்.
அவரின் ஒத்துழைப்பு என நாங்கள் சொல்ல வருவது கொழும்பில் இருக்கும் ஆணைக்குழு மூலமான விசாரணைகள் பற்றியல்ல. மாறாக இதற்காக உள்ளுரில் விஷேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அவர் ஒத்துழைக்க தயார் என்றால் இந்த விடயங்களை நிரூபித்துக் காட்ட முடியும்.’ என்று குறிப்பிட்டார்.
No comments
Post a Comment