பேஸ்புக், இன்ஸ்ரகிராம் மற்றும் டிண்டர் இணையத்தளங்கள் முடங்குவதற்கு, தாம் ஊடுருவியமையே காரணமென 'லிசார்ட் ஸ்குவாட்' என்ற ஊடுருவல்காரர்களின் குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் சுமார் 1 மணித்தியாலத்துக்கு பேஸ்புக் சமூகவலையமைப்பு இயங்கவில்லை. இதேபோல் இன்ஸ்ரகிராம் மற்றும் டிண்டர் சேவைகளும் செயற்படவில்லை.
உலகின் பல நாடுகளில் மேற்படி சேவைகள் / இணையத்தளங்கள் இயங்கவில்லை, இதனால் அவற்றின் பாவனையாளர்கள் குழப்பத்துக்கும் , கவலைக்கும் உள்ளாகினர்.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கு 'Lizard Squad' குழு உரிமை கோரியுள்ளது.
மேற்படி தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என அக்குழு டுவிட்டர் ஊடாகவும் அறிவித்துள்ளது.
எனினும் பேஸ்புக் இதனை மறுத்துள்ளது. தொழில்நுட்ப கோளாறொன்றே சேவை தடைப்பட் ட தற்கான காரணமென பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதேவேளை மலேசியா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியது தாங்களே என 'லிசார்ட் ஸ்குவாட்' தெரிவித்திருந்தது.
மேலும் விமானசேவையை பயன்படுத்தும் பலரின் தரவுகளை வெளியிடப்போவதாகவும் அறிவித்திருந்தது.
எனினும் குறித்த விமான சேவை அதனை மறுத்திருந்ததுடன் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் முழுதாக நிறைவடையும் முன்னரே பேஸ்புக் போன்ற மிகப் பெரிய சமூகவலையமைப்பு சற்று நேரத்துக்கு முடங்கிய விடயம் தொழில்நுட்ப உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த வருட இறுதி காலப்பகுதியில் மைக்ரோசொப்ட் மற்றும் சொனி மீதான ஊடுருவலுக்கும் தாமே காரணமென 'லிசார்ட் ஸ்குவாட்' குறிப்பிட்டிருந்தது.
இக்குழு எங்கிருந்து செயற்படுகின்றது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் ரஸ்யாவில் இருந்து இக்குழு செயற்படுவதாக நம்பப்பட்டது . எனினும் இக்குழு பல்வேறு நாடுகளில் இருந்து செயற்படும் தனிநபர்களை உள்ளடக்கிய குழுவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில காலங்களுக்கு முன்னர் 'எனன்யோமஸ்' என்ற ஊடுருவல்கார ர்களின் குழு தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பல்வேறு முக்கியமான நிறுவனங்கள் மற்றும் அரச அமைப்புகளின் இணையக் கட்டமைப்புகளினுள் ஊடுருவியமையே அதற்கான காரணமாகும்.
அதேபோல் தற்போது 'லிசார்ட் ஸ்குவாட்' குழு தொடர்பில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. பேஸ்புக் போன்ற சமூகவலையமைப்புகளினுள் நுழைந்து பாவனையாளர்கள் தரவுகள் திருடப்பட்டு அது பகிரங்கப்படுத்தப்பட்டால் அது பாரிய சிக்கலில் போய் முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
No comments
Post a Comment