கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்படவேண்டும். இதை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் புதன்கிழமை (21) நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாக அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். முதலமைச்சர் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை பல கட்சிகள் கொண்டுள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் பல பாதிப்புகளை நாங்கள் எதிர்நோக்கிவந்தோம். எமது சமூகத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை மாற்றத்துக்காக புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்கச் செய்வதில் நாங்கள் பெரும் பங்காற்றியுள்ளோம். குறிப்பாக, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பெருமளவில் தமது வாக்குகளை புதிய ஜனாதிபதிக்கு அளித்தனர்.
இந்நிலையில், புதிய அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நல்லெணங்களையும்; வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகார பங்கீடு தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையில், கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அமைப்புக்கு பச்சைக்கொடி காட்டி, தமிழ் மக்களுக்கு நம்பிக்கை நிலையை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். கடந்தகாலத்தில் மாறி,மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். அந்த நிலையை இந்த அரசாங்கம் மாற்றும் என்றும்; நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நிலையில், கிழக்கு மாகாணசபையை கொண்டு தமது கிழக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்ற முனையும்.
அரசாங்கம் அதற்கு பூரண ஆதரவு வழங்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும் நம்புகிறோம்' என்றார்.
No comments
Post a Comment