Latest News

January 22, 2015

சன் டிவி ஊழியர்கள் அதிரடி கைது
by admin - 0


SUN TV
SUN TV
சன் டிவிக்கு சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வியின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்றிரவு டெல்லியில் இருந்து வந்த சிபிஐ குழுவினர் இந்த மூவரையும் சென்னையில் கைது செய்தனர்.


தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சென்னை வீட்டில் முறைகேடாக 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்த வழக்கில் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் இணைப்புகள் சன் டி.விக்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்பது சிபிஐயின் முக்கியக் குற்றச்சாட்டாகும். சுமார் 323 அதிக சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டு, பின்னர் இவை சன் டிவி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இந்த இணைப்புகள் அதிகக் கட்டணம் கொண்டவை. இதைத் தான் அமைச்சராக இருந்த தயாநிதி வீட்டுக்குத் தந்து அதை சன் டிவி தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ கூறுகிறது. 

இந் நிலையில், நேற்றிரவு டெல்லியில் இருந்து வந்த சிபிஐ குழுவினர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன், சன் டி.வியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வியின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை கைது செய்தனர். இந்த மூன்று பேரும் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். பின்னர் இவர்களை சிபிஐ தனது காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளது.
SUN TV
SUN TV

இந்த மூன்று பேரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த விவகாரத்தில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 2011ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே விசாரணையை ஆரம்பித்த சிபிஐ, 2007ம் ஆண்டில் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே. பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்தது. சன் டிவியின் சில உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந் நிலையில் நேற்றிரவு வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். மேலும் கண்ணன், ரவி ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




« PREV
NEXT »