Latest News

January 04, 2015

ஏர் இந்தியா விமானம் கடத்தப்படும்-மிரட்டல் போன்
by Unknown - 0

ஏர் இந்தியா விமானம் கடத்தப்படும் என்று கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா புக்கிங் அலுவலகத்திற்கு போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா புக்கிங் அலுவலகத்திற்கு சனிக்கிழமை மாலை 5.42 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினால் மறுமுனையில் இருந்த நபர் ஏர் இந்தியா விமானம் கடத்தப்படும் என்று பெங்காலி மொழியில் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இது போன்ற மிரட்டல் அழைப்புகள் சாதாரணம் என்றாலும் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் எந்த ஏர் இந்தியா விமானம் கடத்தப்படும் என்று குறிப்பாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் பவ்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

மேலும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். விமான நிலையங்களில் போலீஸார் சாதாரண உடையில் ரோந்து வருகிறார்கள். பயணிகளின் உடைமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில் அகமதாபாத், மும்பை மற்றும் கொச்சியில் ஏர் இந்தியா விமானத்தை தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »