டெல்லியில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் சற்று தாமதமாகத் தொடங்கியது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முதலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னமான அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார். கடந்த சுதந்திர தினத்தைப் போல இம்முறை தலைப்பாகை அணிந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி பின்னர் குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரான அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா மனைவியுடன் தமது தனி வாகனத்தில் வருகை தந்தார்.
பொதுவாக குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் ஜனாதிபதியின் வாகனத்தில் அழைத்துவரப்படுவது வழக்கம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா, அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமது பீஸ்ட் வாகனத்தில் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை தந்தார்.
விழா மேடையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. பின்னர் தீவிரவாதிகளுடனான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் உள்ளிடோருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றார்.
அண்மையில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரி வடிவமைப்புகள் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றன. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இதில் பங்கேற்றன. இந்த குடியரசு தின விழாவில் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றதால் டெல்லியில் வரலாறு காணாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
No comments
Post a Comment