தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக வடிவமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு முக்கிய செயற்திட்டங்கள் மற்றும் தீர்மானங்களுடன் நிறைவு கண்டது.
நா.தமிழழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி அரசவை அமர்வாக, டிசம்பர் 5ம் நாள் வெள்ளி முதல் மூன்று நாள் தொடராக இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வானது, அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வோடு, பிரான்சில் துணை அமர்வும், தொழில்நுட்ப வழி இரண்டும் இணைந்ததாக இடம்பெற்றிருந்தது.
தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சியின் கொள்கைப்பரப்பாளர் நாஞ்சில் சம்பத், மலேசியா பினாங்கு மாநில துணை முதலவர் இராமசாமி உள்டங்கலாக பல சிறப்பு அழைப்பாளர்கள் நேரடியாக பங்கெடுத்திருந்தனர்.
தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்ததான உலகத்தமிழ் தேசிய கொங்கிரஸ் ஒன்றினை அமைக்குமாறு தமிழக அரசினை நோக்கிய அறைகூவலொன்றினை பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் அமர்வின் முதன்நாள் விடுத்திருந்தார்.
தீர்மானங்கள் :
ஈழத்தமிழர்களின் அவர்களின் அரசியல் விருப்பினை வெளிக்கொணர, அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடனான கருத்தறியும் பொதுசன வாக்கெடுப்பு மற்றும் புலிகள் மீதான மீள்தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடு செய்யக்கூடாது என்ற வலியுறுத்தல் ஆகிய முக்கிய இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
செயற்திட்டங்கள் :
நிலம் – புலம் ஆகியவனற்றின் தேவைகளை கவனத்தில் கொண்டு, அரசியல் சமூகத்தளத்தில் ஈழத்தமிழினத்தினை வலுமிக்கதொரு சமூகமாக வளர்தெடுக்கும் நோக்கிலான 15 பாரிய செயற்திட்டங்கள், அரசவையில் பிரதமர் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்டிருந்தது.
தாயக அபிவிரித்தி, மனித உரிமைகள், கல்வி, மொழி, பண்பாடு ,ஆவணம் ,இளையோர் என பனமுகத்தளங்களின் பல்வகை தேவைகளை கருத்தில் கொண்டு இப்பாரிய செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிர்வாக விரிவாக்கம் :
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, பிரதமர் அலுவலகத்தின் செயற்பாடுகள் நாடுவாரியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அதற்கான பொறுப்பதிகாரிகளும் நியமிக்கப்பட்டு அரசவையில் பிரதமர் வி.உருத்திரகுமாரனினால் அறிவிக்கப்பட்டது.
அறிக்கைகள் :
ஒவ்வொரு அமைச்சுக்களினதும் மையங்களினதும் 2014ம் ஆண்டின் செயற்பாட்டறிக்கை, மேற்சபை உறுப்பினர்களின் அறிக்கை, பிரேரணைகள் என பல்வேறு விடயங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
நிறைவு :
கடந்த மூன்று நாள் அமர்வும் நாம் எம்மை சனநாயகப்பண்பு கொண்டவர்களாக வளர்த்துக் கொண்டுள்ளோம் என்பதற்குச் சான்றாகவும், செயற்படுவதற்காக முடிவு செய்துள்ள திட்டங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுவாக்கி போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக அமர்வின் இறுதிநாள் உரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் :
மூன்று அமர்வினை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கண்டுகொண்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு தமிழ் சமூக பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது புதிய நம்பிக்கை வந்துள்ளதோடு ,தமிழீழத்தினை வென்றடைவதற்கான திசையினை தெளிவாக முன்வைத்திருந்தாக கருத்துரைத்துள்ளனர்.
No comments
Post a Comment