Latest News

January 01, 2015

ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டேன் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்
by admin - 0

அனந்தி சசிதரனுக்கு அடுத்த தமிழ் உணர்வுள்ள உறுப்பினர்.இவர்களின் வரிசையில் தமிழ் உணர்வாளர்கள் யார் ?


ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் மண்ணில் வரலாறு அதற்கு முன் கண்டிராத சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களின் இடப்பெயர்வை எங்களுக்கு பரிசளித்தவர் சந்திரிக்கா.செம்மணிப்புதைகுழி உள்ளிட்ட பல பேரவலங்களை இவரது ஆட்சியில் தான் தமிழர்கள் முகம்கொடுத்தோம். தமிழர்களுக்கெதிரான போரில் 75% வெற்றி தன்னுடையது என்று அவரே உரிமை கோருகிறார்.

எங்கள் மக்கள் மீதான இன அழிப்பின் குறியீடாக நிற்கிற கொடூரமான முள்ளி வாய்க்கால் பேரவலத்தை எமக்கு வழங்கியது மகிந்த ஆட்சியே..
இன்றும் இந்த அவலத்திலிருந்து மீண்டு எழாத நிலையில், உடலில் குண்டுச் சிதறல்களோடும் உளச் சிதைவுகளோடும் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர் எங்கள் மக்கள்..

இப்போரின் தளபதியாக முன் நின்று உழைத்து அழிவுகளையும் அவலங்களையும் தமிழர் குடிக்கு வழங்கியவர் சரத் பொன்சேகா..

முள்ளிவாய்க்காலில் எங்கள் இனம் அழிக்கப்பட்ட போது கொழும்பில் பால்சோறு அரசியலையும் பட்டாசு அரசியலையும் பங்கு போட்டவரே மைத்திரி பால சிறிசேன.

இவர்கள் எவரையும் ஆதரித்து என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. மரணித்த எங்களின் உறவுகளின் உணர்வுகளினை மிதித்து இவர்களுக்காக வாக்குக் கேட்க முடியாது. வாழ்த்துப்பா பாடவும் முடியாது. 

தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு

எங்கள் தாயகம் கடந்த காலங்களில் கண்ட அனைத்து வலி சுமந்த நிகழ்வுகளிலும் நேரடி பங்காளர்களாக திகழ்ந்த எமது மக்கள் இத் தேர்தலில் சரியான முடிவை எடுக்கவல்ல அரசியல் அறிவுள்ளவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

அதே வேளை தமிழர்கள் தன் பின்னால் நிற்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு மகிந்த அரசு முனைகின்றது. தமிழ் மக்கள் இத் தேர்தலில் எடுக்கக் கூடிய முடிவுக்கு முரணான முடிவை வாக்கு மோசடி மூலம் வெளிப்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. 
எனவே தேர்தலின் போது இது குறித்து கண்காணிக்கிற பணியை ஆற்றுவேன் 

எங்களுக்கான தீர்வு, ஒருங்கிணைந்த மக்கள் சக்தியின் அரசியல் போராட்டத்திலேயே தங்கியுள்ளது. தேர்தலில் யார் வென்றாலும் எங்களின் தீர்வுக்கு எங்களின் உரிமைக்குரலே அவசியம். 

தேர்தல் முடிவில் தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் விரும்பும் நிரந்தரத் தீர்வை நோக்கிய எனது உரிமைக்குரல் சத்தியத்தின் வழியில் என்றும் தொடரும். என்றார்


« PREV
NEXT »

No comments