கொழும்பு தொழில்சார் நிபுணர்களின் சம்மேளனம் இன்றைய தினம் நடத்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போதே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
பயங்கரவாதம் மீள எழுச்சிபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக இருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாகவோ அல்லது வேறு ஒரு அமைப்பாகவே இது இருக்கலாம். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கடும்போக்காளர்கள், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து தமது குறிக்கோளை அடைவதில் தீவிரம்காட்டி வருகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி பிரிவிணைவாத கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பவும், மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து இலங்கையில் வன்முறைகளை தூண்டிவிடவும் இந்த சக்திகள் தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள் பலவற்றை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. எனினும் சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்பும் சில முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த நிலையில் இராணுவ பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான இடங்களில் மாத்திரமே இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.
அதேவேளை விடுதலைப் புலிகள் மீள எழுச்சிபெறுவதை தடுப்பதற்காக உளவுத்துறையினர் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment