Latest News

December 30, 2014

ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"- முன்கூட்டியே எச்சரித்த நபர்!
by Unknown - 0


இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன.

டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட்டில், ஏர் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு (கருப்புக் கரம் என்று அதை இவர் குறிப்பிடுகிறார்) குறி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச். 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் ஒரு கூட இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார்.

இவரது பிளாக்கில் மொத்தம் 39 போஸ்ட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதை 6,50,000 பேர் பார்த்துள்ளனர். இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. சீனர் என்று மட்டுமே தெரிகிறது. இவர் சீன உளவாளியாக இருக்கலாம் அல்லது ஹேக்கராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவரது பிளாக் போஸ்ட்டுகள் அனைத்தும் வைரலாக பரவி வருகின்றன.

ஏர் ஏசியாவை மட்டுமல்ல முன்பு விபத்துக்குள்ளான எம்.எச் 17 மற்றும் எம்எச் 370 விமானங்களையும் கூட இந்த கருப்புக் கரம்தான் குறி வைத்ததாகவும் இவர் கூறியுள்ளதுதான் குழப்பத்தைத் தருவதாக உள்ளது. இவர் தனது ஒரு போஸ்ட்டில் இப்படிக் கூறியுள்ளார். கருப்புக் கரம்தான் எம்எச் 370 மற்றும் எம்எச் 17 ஆகியவற்றைக் கடத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது என்று கூறியுள்ளார். இதன் மூலம் உலகின் 6வது மிகப் பெரிய விமான நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நொறுங்கிப் போக காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் இவர்.

தற்போது இந்த கருப்புக் கரம், மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியாவைவைக் குறி வைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கருப்புக் கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே ஏர் ஏசியாவில் செல்ல நினைக்கும் சீனர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எச் 370 காணாமல் போனது போல நீங்களும் காணாமல் போய் விடுவீர்கள் என்று கூறியுள்ளார் இவர்.

இவர் கருப்புக் கரம் என்று யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை. தீவிரவாத அமைப்பாயா அல்லது ஏதாவது நாட்டையா என்றும் விளங்கவில்லை. இந்த ஆண்டின் 3வது மிகப் பெரிய விமான அசம்பாவிதாக கருதப்படும் ஏர் ஏசியா விமான விபத்தில் எந்த சீனரும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பிளாக்கரின் செயல்பாடுகள் நின்று போய் விட்டன. டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு இவர் எதையும் எழுதவில்லை.


« PREV
NEXT »