யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே.
இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற்படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது.
எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கோப்பாய் பகுதியில் சில கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உதுறு ஜனனி மற்றும் நொதேர்ன் பவர் பிளான்ட் எனும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாரிய மின் பிறப்பாக்கிகள் தற்போதும் இயங்கி வருவதாகவும் இவற்றின் மூலம் வெளியேறும் அதிகளவிலான எண்ணெய்க் கழிவுகளே பாதுகாப்பற்ற முறையில் நிலத்தினடியில் விடப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
சில வருடங்களிற்கு முன்னதாகவே பொதுமக்களாலும் சில சமூக அமைப்புக்களினாலும் இது தொடர்பான முறைப்பாடுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். அ. ஜெயக்குமாரன், உடுவில் பிரதேச செயலர் திரு. ச. நந்தகோபால் மற்றும் சுற்றுச் சூழல் அதிகார சபையின் வடமாகாண உதவி ஆயையாளர் திருமதி. விஜிதா சந்திரகுமார் ஆகியோரால் திட்டமிடப்பட்ட முறையில் இம்முறைப்பாடுகளும் இவை தொடர்பான செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.
இவர்கள் இப்பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையற்று இருப்பதாகவும் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை மறைப்பதில் தீவிரம் காட்டுவதாகவும் அறிய முடிகின்றது.
Social Buttons