Latest News

November 25, 2014

பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இலங்கையின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன!
by Unknown - 0

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகளுக்கான தடைநீக்கம் தொடர்பில் நேற்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரபுக்களின் சபையின் அமைச்சரவை பேச்சாளர் வலெஸ் ஒப் சல்டைரி இலங்கையின் நியாயமான தேர்தல் ஒன்று நடத்தப்படுவதை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தாலும் 2000ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவிலும் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தடை கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் வலஸ் பிரபு ஐரோப்பிய நீதிமன்றம் குறித்த தடைநீக்க தீர்ப்பை வழங்கினாலும் தடைப் பட்டியலுக்குள் இருந்து விடுதலைப்புலிகளின் பெயர் நீக்கப்படவேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமுறைகளுக்கு ஏற்ப பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் தடைசெய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த பதிலை அடுத்து தமது கருத்தை முன்வைத்த நேஸ்பி பிரபு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு ஈழத்துக்கான நிதிச்சேகரிப்பு என்பன எதிர்வரும் வியாழக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தநிலையில் பயங்கரவாத நடவடிக்கையாக இருந்தால் எந்தநிகழ்வும் நிறுத்தப்படவேண்டும் என்று நேஸ்பி பிரபு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் மெட்ரோபொலிட்டன் பொலிஸாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த வலெஸ் ஒப் சல்டைரி இந்த நிகழ்வு தொடர்பில் மேட்ரோபொலிட்டன் பொலிஸாருக்கு இதுவரை தெரியாதிருக்குமானால் அது ஆச்சரியத்தக்க செயல் என்று குறிப்பிட்டார்.
பிரித்தானியா எப்போதும் இலங்கையின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
பாஷ் பிரபு(தொழில்கட்சி) தமது கேள்வி நேரத்தில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்கூட்டிய தேர்தல் ஒன்றை அழைத்துள்ளார். இந்தநிலையில் எதிர்கட்சி வேட்பாளர் சிறிசேன பங்கேற்ற தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்று அரசாங்கத்தினால் குழப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தேர்தல் நியாயமானதாக நடக்கும் என்று எவ்வாறு நம்பலாம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரபுக்களின் சபையின் அமைச்சரவை பேச்சாளர் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியா இலங்கையிடம் கேள்வி எழுப்பும் என்று குறிப்பிட்டார்.
ஹன்னாய் பிரபு தமது கேள்வியின்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த வலஸ் ஒப் சல்டைரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டமையை சுட்டிக்காட்டினார்.
ஏவெபெரி பிரபு கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழையாமை போக்கை பிரித்தானியா கண்டிக்கிறது.
இலங்கையின் உள்நாட்டு விசாரணையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாகவே சர்வதேச விசாரணை மீது பிரித்தானியா கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கேள்வி எழுப்பிய கென்னடி பிரபு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த வலெஸ் ஒப் சல்டைரி பிரித்தானியா தமது கொள்கையில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டதுடன் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
« PREV
NEXT »