Latest News

November 14, 2014

நான் ஓர் ஸ்ரீலங்கன் எழுத்தாளராக இங்கு வரவில்லை, அது எனது அடையாளமும் அல்ல - தீபச்செல்வன்
by admin - 0

நான் ஓர் ஸ்ரீலங்கன் எழுத்தாளராக இங்கு கலந்து கொள்ளவில்லை அதுவல்ல எனது அடையாளம் என்று தெரிவித்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ஓர் ஈழத்தவன் என்பதே எனது அடையாளம் என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா என்ற தேசம் எங்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது என்றும் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதே ஈழத்தவர்களின் கனவு என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் நியூ டெல்லியில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டதுடன் ஈழம், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்.

Transnation: Poetry and the Idea of Nation என்ற தலைப்பில் இடம்பெற்ற நிறைவுநாள் முதல் அமர்வில் டெல்லியை சேர்ந்த கவிஞர் அசாட் சைடி நேபாளத்தை சேர்ந்த கவிஞர் பெஞ்சு சர்மா ஈழத்தை சேர்ந்த தீபச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஈழ தேச ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் என்ற தலைப்பில் தீபச்செல்வன் பேசினார்.

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள ஈழத் தமிழ் இலக்கியங்கள் ஈழ தேசத்தின் தனித்துவமான வரலாற்றை பறைசாற்றும் சாட்சியங்கள். இன எழுச்சி சார்ந்த ஈழ இலக்கியம் எங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஆயுதம்.

தமிழக மக்களும் ஈழ மக்களும் தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளபோதும் ஈழத் தமிழர்கள் தனித்துவமான தேசிய இனமாக திகழ்கின்றனர். ஈழத்தில் இலக்கிய புலத்திலும் வரலாறுதோறும் தனித்துவம் மிக்க இலக்கியங்கள் தோன்றியிருகின்றன.

தமிழில் போர் இலக்கியத்திற்கு நீண்ட பாரம்பரியம் இருக்கின்றது. ஈழப் போர் இலக்கியம் போர் சார்ந்த புதிய அனுபவங்களையும் அதனுடன் தொடர்புடைய புதிய அரசியலையும் பதிவாக்கியுள்ளது.

இன ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் மத்திரமின்றி பெண் எழுச்சி, தீண்டாமைக்கு எதிரான குரல்கள் என சமூக விடுதலை சார்ந்த இலக்கியங்களும் ஈழத்தில் தனித்துவமானவை.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளின் ஆக்கப்படும் இலக்கியங்கள் ஈழ தேச அனுபவங்களை புலம்பெயர் நாடுகளின் மொழிகளிலும் பார்வைகளிலும் பகிரவும் புலம்பெயர் தேச அனுபவங்களை தமிழ்மொழியில் பகிரும் தேசங்களைக் கடக்கும் அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈழ தேசத்தை ஸ்ரீலங்கா தேசம் கடுமையாக ஒடுக்கிவரும் நிலையில் அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை பதிவு செய்வது என்பது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, இராணுவத்தால் ஆளும் ஒரு தேசத்தில் மிகவும் சவால் நிறைந்த பணி.

ஈழத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த சவால் மிக்க பயணத்தை தொடர்கின்றனர். இன ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ள எங்கள் தேசம் பற்றியும் வாழ்வின்மீது ஈழத்தவர்களுக்கு இருக்கும் கனவு பற்றியதுமான ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம்.

அத்துடன் நிகழ்வின் இறுதியில் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த தீபச்செல்வனின் PRAY FOR MY LAND என்ற தொகுதியிலிருந்து இரு கவிதைகளும் வாசிக்கப்பட்டன.
« PREV
NEXT »