Latest News

November 19, 2014

தலைவரின் பிறந்த நாளை கொண்டாட வாருங்கள் : வைகோ அழைப்பு
by admin - 0


தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கை:

உலக வரைபடத்தில் ரத்தக்கண்ணீர்த் துளியாகக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கு மாகாணத்தில் வல்வெட்டித் துறையில் 1954 நவம்பர் 26ஆம் திகதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் எனும் இலட்சியத் தம்பதிக்கு பிறந்தவர் வீரத்திருமகன் பிரபாகரன்.

ஈழத் தமிழ் இனம் சிங்களக் கொடியோரால் தாக்கப்படுவதும், வதைக்கப்படுவதும் கண்டு இதயம் கொதித்து, சிங்களவனின் ஆதிக்கக் கொட்டத்தை ஒடுக்க தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தனது 15 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதம் ஏந்தினார்.

வீர இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 70களின் தொடக்கத்தில் புதிய புலிகள் எனும் ஈழ விடுதலை அமைப்பைத் தொடங்கினார். 1976 மே 5 ஆம் திகதி அன்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்றுவித்தார்.

விடுதலை இயக்கங்களில் காணமுடியாத ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், அர்ப்பணிப்புத் தியாக உணர்வையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்படுத்தினார்.

தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாகத் திகழ்ந்து தன்னல மற்ற எளிய வாழ்வை அவரும், அவரது பாசத் துணைவியார் மதிவதனியும், மாணிக்கக் கட்டிகளான அவர்களது பிள்ளைகளும் பொது வாழ்வுக்கு இலக்கணமாக வாழ்ந்தனர். போர் முனையில் களம் கண்டு அஞ்சாத அவரது வீர மகன் சார்லஸ் அந்தோணி மரண பயங்கரத்துக்கு மத்தியில் போர் நடத்தி உயிரைத் தந்தான்.

இந்திய அரசும், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், இஸ்ரேல் அரசுகளும் சிங்கள வனுக்கு வழங்கிய ஆயுதங்களும், இந்தியத் தளபதிகள், மிக நவீன போர்க் கருவிகளை, மின்னணுச் சாதனங்களைச் சிங்களப் படைகளுக்குப் பக்கபலமாக நிறுத்தி யுத்தத்தை நடத்தியதாலும், உலகம் தடை செய்த குண்டுகளைப் பயன்படுத்தியதாலும் விடுதலைப்புலிகளுக்கு உணவும், மருந்தும், ஆயுதங்களும் எந்த நாட்டிலிருந்தும் கிடைக்கப் பெறாததாலும் யுத்தத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ராஜபக்சவின் சிங்கள ராணுவம் படுகொலை செய்தது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், லெனின் பிறந்த நாளை பொதுவுடமைவாதிகள் கொண்டாடுவதுபோல், ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுவதுபோல், தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம்.

அகிலத்தின் பல நாடுகளில் வாழும் தமிழர்களே, புலம் பெயர்வாழ் ஈழ உறவுகளே. வரும் நவம்பர் 26ஆம் திகதி அன்று அவர் பிறந்த நேரமான முன்னிரவு 7 மணி 18 நிமிடம் அளவில், தமிழகத்தில் கொண்டாடுவோம். நவம்பர் மாதம் 26ஆம் திகதி அந்தந்த நாட்டு நேரம்படி விழா எடுப்போம்.

வானவெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்; பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்.

தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்.

« PREV
NEXT »