Latest News

November 07, 2014

ஐ.நா வின் சுயாதீன விசாரணைகளை குழப்பும் சதியில் இலங்கை அரசு - ஐ.நா
by admin - 0

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐ.நா விசாரணைகள் குழுவின் நடவடிக்கைகளை குழப்ப இலங்கை அரசு சதிசெய்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை குறித்த இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் மீதான இங்த குற்றச்சாட்டை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ரூபட் கொல்விலே முன்வைத்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் வழமையான ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் கொல்விலே, இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க தொடர்ந்தும் மறுத்துவரும் இலங்கை அரசு, ஐ.நா விசாரணைக்கு சாட்சியளிக்க முன்வருபவர்களையும் தடுப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முழுமையாக மறுத்துவரும் இலங்கை அரசு, மறுமுனையில் ஐ.நா விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கின்றது என்று கூறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் கொல்விலே, ஐ.நா விசாரணைக் குழு குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் தனது நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எதற்காக இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணைக் குழு நடத்திவரும் சுயாதீன விசாரணைகளை குழப்ப சதி செய்ய வேண்டும் என்ற கேள்வியும் இங்கு எழுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ரூபட் கொல்விலே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

« PREV
NEXT »