Latest News

October 15, 2014

தேர்தல் வரும்வேளை வாக்குச்சீட்டைக் கிழித்தெறிவோம் - சம்பூர் மக்கள்
by admin - 0

எமது சொந்த மண்ணில் எங்களை மீளக் குடியமர்த்தாவிட்டால் இனிவரும் தேர்தல் காலங்களில் வாக்குச்சீட்டை கிழித்தெறிவோம்” என சம்பூர் அகதிகள் முகாமிலுள்ள மக்கள் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டபோது சம்பூர் மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பறிச்சான், பட்டித்திடல், மணல்சேனை, கிளிவெட்டி போன்ற அகதிகள் முகாம்களில் 848 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அதில் 345 குடும்பங்கள் கிளிவெட்டி முகாம்களிலும், பட்டித்திடல் அகதிகள் முகாம்களில் 134 குடும்பங்களும், சம்பூர் மண்ணில் பல சொத்துகளை இழந்த 59 குடும்பங்களும் மணல்சேனை அகதிகள் முகாமிலும் வாழ்ந்துவருவதுடன், கிளிவெட்டி அகதிகள் முகாம்களில் 310 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாகவும் தெரியவருகின்றது.

அம்முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசினால் ஆரம்பத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2012.12.22 ஆம் திகதி முதல் அரசினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை . அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்த உறவினர்களால் ஏழை மக்களின் பசியைப் போக்கக் கொண்டுவரும் உலர் உணவுப்பொருட்களையும் திருப்பி அனுப்புவதாகவும் அதையாவது பெற்றுக்கொள்ள முடியாதநிலை தோன்றியுள்ளது.

நாம் பிறந்த மண்ணில் சிறப்பாக வாழ முடியும். அகதி என்ற போர்வையில் வாழத் தேவையில்லை. எம்மை எமது பகுதியிலேயே குடியேற்றுங்கள். அப்படி குடியேற்றாவிட்டால் நாம் எதிர் காலத்தில் தேர்தல் வரும்வேளை வாக்குச்சீட்டைக் கிழித்தெறிவோம் என்று கூறியுள்ளனர்..
« PREV
NEXT »

No comments