Latest News

October 17, 2014

மேய்ச்சல் நிலத்தில் படையினரின் மலக்கழிவுகள் கொட்டப்படுகின்றன: ஐங்கரநேசன்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலி தரவை (மேய்ச்சல் நிலத்தில்) வெளியில் கொட்டிவருவதால் சுற்றச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

வடமாகாண நீரியல் ஆய்வு மைய (NORTHERN PROVINCIAL HYDROLOGICAL RESEARCH CENTREதிறப்பு விழா, தொண்டைமானாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, 

யாழ். குடாநாட்டில் நிலத்தடி நீரின் தரம் விவசாய இரசாயனங்களாலும் மலக்கிருமிகளாலும் மாசடைந்து வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட கரையோர பகுதிகளிலள்ள குடிநீரில் மலக்கிருமிகள் காணப்படுவதாகவும், அதனால் போத்தல் குடிநீரையே வாங்கி அருந்துமாறும் அண்மையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் பரிந்துரை செய்திருக்கிறார்கள். 

குடிநீரைக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடியுங்கள் என்று சொல்லாமல், போத்தல் குடிநீரின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பர வாகனம் போல போத்தல் குடிநீரை வாங்கி அருந்துங்கள் என்று அவர்கள் சொல்லிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

பொதுமக்களை அச்சப்படவைத்து, போத்தல் குடிநீரை வாங்க வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் முயற்சியில் அரச துறைகள் ஈடுபடக்கூடாது. எமது கழிவகற்று முறைகளில் உள்ள குறைபாடே குடிநீரில் மலக்கிருமிகள் கலப்பதற்கான பிரதான காரணமாக உள்ளது. 

எமது நிலம் நுண்துளைகளை கொண்ட மயோசின் பாறைகளால் ஆனது. முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாதபோது, மயோசின் பாறைகளின் நுண்ணிய துளைகளினூடாக மலக்கழிவுநீர் வடிந்து, குடிநீருடன் மலக்கிருமிகள் கலந்துவிடுகின்றன. 

யாழ். மாநகர சபையினர் மலக்கழிவுகளை ஏற்றிச்சென்று கல்லுண்டாய் வெளியில் கொட்டி வருகின்றனர். இதற்கு அவர்களின் நிர்வாக சீர்கேட்டையோ அல்லது அவர்களிடம் கழிவகற்றும் முறைகளை மேம்படுத்துவதற்கு போதிய நிதி இல்லாததையோ காரணங்களாக சொல்லலாம்.

ஆனால், சகல அதிகாரங்களையும் சகல வளங்களையும் கொண்டிருக்கும் படையினரும் அவ்வாறுதான் செய்கிறார்கள். தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலி தரவையில் கொட்டிவருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. 

1980களில் விமானத்தில் இருந்து மலப்பீப்பாய்களை யாழ் குடாநாட்டு மக்களின் மீது வீசிய படையினருக்கு இது பெரிய விடயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், குடாநாட்டின் குடிநீரில் மலக்கிருமிகள் என்று பேசும் அதிகாரிகள் படையினரின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசாமல் இருப்பது வேதனையானது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
« PREV
NEXT »

No comments