இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, நேற்று மாலை, ஜெயலலிதா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை:ஒரு தலைவன் குறித்து, அண்ணாதுரை கூறும்போது, 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்றார். அவரது வழியில், எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பில் இருக்கும் நான், அவர்களின் வழியில், பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.என் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவின் விவரம், எனக்கு தெரிவிக்கப்பட்டது.என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும், பற்றின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ, நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ, யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், எந்த செயலிலும், யாரும் ஈடுபட வேண்டாம். யார் மீதும், எவ்வித குற்றச்சாட்டையும், சுமத்த வேண்டாம்.யாரும் குறை கூற இடமளிக்காத வகையில், அமைதி காத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை, எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க, ஒத்துழைக்க வேண்டும் என, தமிழக மக்களையும், என் ஆதரவாளர்களையும், கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன்.நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல் முறையீட்டில், எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment