Latest News

October 07, 2014

ஜெயலலிதா பிணையில் விடுதலை?
by Unknown - 0

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதைப் போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க அவர் கோரிக்கை வைத்தார்.

ஆனால் ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் மற்ற மனுதாரர்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சந்திரசேகரா தள்ளி வைத்தார். பிற்பகல் இரண்டரை மணியளவில் விசாரணை மீண்டும் தொடங்கியபோது ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை வைத்தார். அதைத் தொடர்ந்து பவானி சிங்கும் வாதிட்டார்.

அப்போது அவர் ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பு எதிர்க்கவில்லை என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி சந்திரசேகரா உத்தரவிட்டார். முன்னதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று முற்பகலில் நீதிபதி சந்திரசேகரா பெஞ்ச் முன்பு தொடங்கிய விசாரணையின்போது, ஜெயலலிதா சார்பில் ராம்ஜேத்மலானி ஆஜரானார்.

அவரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் காரசாரமாக வாதிட்டனர். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட, பதிலுக்கு பவானி சிங்கும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மேற்கோள் காட்டி வாதிட்டார். ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான வாதம் மற்றும் பிரதிவாதம் 11.30முதல் 12.30வரை சுமார் 1மணிநேரம் நடந்தது.

கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது 3வது முயற்சியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 

« PREV
NEXT »