சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது, அவரது தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் முதல்கட்ட வாதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்த மாதம் 29ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை 30ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, இந்த வழக்கில் ஆஜராவது குறித்து கர்நாடக அரசின் நியமன ஆணை தனக்கு கிடைக்காததால் வாதாட முடியாது என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் கூறியதை அடுத்து விசாரணையை 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலா பிறப்பித்த உத்தரவின் பேரில், மறுநாள் அதாவது கடந்த 1ஆம் தேதி அதே நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி ரத்தினகலா, அதை உயர் நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, 7ஆம் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், தசரா விடுமுறை முடிவடைந்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 73வது வழக்காக இருந்தது. இந்த ஜாமீன் மனு நீதிபதி சந்திரசேகரய்யா முன்னிலையில் காலை மணிக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத் மலானியும், அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி வாதிட்டனர்.
முதலில் வாதிட்ட ராம் ஜெத்மலானி, "லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகள், தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கிய உதாரணமாக இருக்கிறது. அதை பரிசீலித்து இந்த வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
மேலும், அவரது உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் எங்கேயும் போய்விட மாட்டார். நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடும்போது தவறால் ஆஜராவார். ஜெயலலிதா சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது, 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிவிட்டீர்களாக என்று நீதிபதி கேட்டார். இதற்கு பதில் அளித்த ராம்ஜெத் மலானி, ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அபராதத் தொகையை உடனே கட்ட தயாராக இருக்கிறோம் என்றும், அரசு தரப்பு கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம் என்றும், லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியதுபோல் ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். அப்போது, ஜெயலலிதா வெளியே வந்தால் வழக்கை திசை திருப்புவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் இளவரசி தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதி்ட்டார். அப்போது, " "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பினாமி சசிகலா என்பதற்கு எந்த ஆதாரமும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாது. சொத்துக்களை சந்தை மதிப்பீட்டின் படி கணக்கிடப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் சசிகலாவுக்கு வந்த வருமானம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தனது கட்சிக்காரர்களின் உடல் நிலையை முதன்மையாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். ஜாமீன் கேட்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஏனென்றால் வழக்கில் மேல்முறையீடு செய்யவும் மனு செய்துள்ளோம் என்று தேசாய் வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அவர், ஜெயலலிதாவின் பினாமிகள் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.
Social Buttons