Latest News

September 05, 2014

தியாக தீபம் திலீபனின் 27ஆம் ஆண்டு நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்று கூடலும்!
by Unknown - 0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும்,தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் பிரித்தானியாவில் நினைவுகூரப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும், தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளி மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square இல்) நடைபெற உள்ளது.
எமது தாயகத்தை இந்திய வல்லாதிக்கம் ஆக்கிரமித்த காலத்தில், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும், இராணுவ, காவல் துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நீர் கூட அருந்தாத உறுதியான அறவழிப் போராட்டத்தை திலீபன் அவர்கள் ஆரம்பித்தார். அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகத் தன்னை உலக அரங்கில் முன்னிறுத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரை, தியாக தீபம் திலீபன் அவர்கள் தன் ஊனுருக்கி வளர்த்த வேள்வித் தீயில் எரிந்து சாம்பலானது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வீரமுழக்கமிட்டவரின் உயிர் காற்றோடு காற்றாகி தமிழர் மூச்சோடு கலந்து 27 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்று வரை வல்லாதிக்க அரசுகளின் அனுசரணையோடு தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச பயங்கரவாத இனக்கருவறுப்புத் தாண்டவம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
1990 செப்டெம்பரில் ஊர்காவல் படையினருடன் இணைந்து சிறீலங்காப்படையினர் தென் தமிழீழத்தில் நிகழ்த்திய படுகொலைகள், அரச பயங்கரவாதிகளின் இனவெறியை உலகுக்குப் பறைசாற்றியது.
1990ம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் நாள் தொடக்கம் 23ஆம் நாள் வரையான காலப்பகுதியில் தென் தமிழீழ மண்ணில் கட்டங்கட்டமாக பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
செப்டெம்பர் 5ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைகழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்களைச் சுற்றி வளைத்த சிங்களப்படையினர் அங்கிருந்தவர்களில் 158 தமிழ் இளைஞர்களை பிடித்து கொண்டு சென்று படுகொலை செய்தனர். பின்னர் செப்டெம்பர் 9 இல் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் முதலிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர் என 184 பேரை சிங்களப்படையினர் படுகொலை செய்தனர்.
இவ்வாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து அரச பயங்கரவாதம் தலை விரித்தாடியது. அதே மாதம் 23இல் மீண்டும் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் 16 இளைஞர்களை சிங்களப்படையினர் பிடித்து கொண்டு சென்று சென்றனர். பின்னர் அவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலைகள் ரணசிங்க பிரேமதாசா சிறீலங்கா அரசுத் தலைவராக இருந்த போது நடாத்தப்பட்டன.  இவ்வாறு சிறீலங்காவில் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களின் காலப்பகுதியிலும் தமிழ் இனத்தையே முற்றாக அழிப்பதற்கான ஆதிக்க வல்லாயுதங்கள் அத்தனையும் முழுப் பலத்துடனும் பிரயோகிக்கப்பட்டன என்பதையும், இன்றும் அது தொடர்ந்த வண்ணமே உள்ளது என்பதையும் வரலாறு பதிந்து கொண்டே செல்கிறது.
இந்த நினைவுகளை எல்லாம் மீட்டுப் பார்ப்பதும்,நடப்பு நிகழ்வுகளையும், திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற அநீதியான நிகழ்ச்சிகளையும் அவதானமாக உற்று நோக்கி திடமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் காலத்தின் தேவை.
ஆறாத வலிகளை அனுபவிக்கின்ற போதும் தாய் மண்ணுக்காக விதையானோரை நெஞ்சில் நிறுத்தி தெளிவுடனும் உறுதியுடனும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழராகிய நாம் வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்து, முன்னோக்கி நகர்வது அவசியம்.
எனவே, இம்மாதம் 26ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்ச்சியிலும் கறுப்பு செப்டெம்பர் படுகொலைகள் நாள்கள் நினைவு கூரலிலும் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
« PREV
NEXT »