இலங்கையில் பொறுப்புக்கூறல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது.
இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து நேற்று மனித உரிமைகள் அமர்வில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய பொறுப்புக்கூறல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாய்மூல அறிக்கை நாளையதினம் உத்தியோகபூர்வமாக அமர்வின்போது அறிவிக்கப்படவுள்ளது என்றும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், மீள்குடியேற்றம் மற்றும் மீளமைப்பு என்பவற்றில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்தநிலையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அலுவலகம் கோரியுள்ளது.
இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் எதிர்ப்பார்ப்பதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை அரசாங்கம் தம்மை நாட்டுக்கும் வருமாறு அழைத்துள்ளதாகவும் தாம் இந்த மாத இறுதியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் செய்ட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த வாய்மூல அறிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை காப்பாளர்கள் மீதான அடக்குமுறை, ஊடக சுதந்திரமின்மை உட்பட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளமை அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் போர் இடம்பெற்ற காலத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கம் காட்டிய எதிர்ப்புகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Social Buttons