சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி அவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளார். மேலும், இம்மூவருக்கும் கூட்டு சதி பிரிவிலும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் அதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது என்பது விதிமுறை. எனவே ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று பெங்களூர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல மற்ற மூவர் தரப்பிலும் ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தசரா விடுமுறையால் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதிகள் விடுப்பில் சென்றுள்ளதால், விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா நேற்று விசாரணை நடத்தினார். அப்போது அரசு தரப்பு வக்கீலாக யாரையும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
ஆனால் மீண்டும் அரசு வக்கீல் இல்லாமலே கூட வழக்கை விசாரிக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று இன்று மீண்டும் நீதிபதி ரத்தினகலா இதை விசாரணைக்கு எடுத்தார். அப்போது அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகிய பவானிசிங், ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், ரத்தினகலா விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார். இதற்கான காரணம், பவானிசிங்கின் எதிர்ப்பு மட்டுமல்ல. அதைவிட முக்கியமான காரணமும் ஒன்று உள்ளது. நாடே எதிர்பார்த்திருக்கும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்க விடுமுறை அமர்வு தயாராக இல்லை என்பதுதான் அந்த காரணம்.
நாடே உற்று கவனிக்கும் ஒரு வழக்கில், தலையிட்டு, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதையோ, அல்லது தீர்ப்பை சஸ்பெண்ட் செய்வதையோ விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் விரும்பமாட்டார்கள் என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவித்துவந்தார்கள், அதற்காகவே ரத்தினகலாவும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். ரெகுலர் பெஞ்ச் இதை விசாரிப்பதே உசிதமாக இருக்கும் என்று ரத்தினகலாவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் திங்கள்கிழமை பக்ரித் விடுமுறை. செவ்வாய்க்கிழமை விடுமுறைக்காலம் முடிந்து ரெகுலர் ஹைகோர்ட் பெஞ்ச்சுகள் செயல்பட ஆரம்பிக்கும். அதன்பிறகு, ரெகுலர் பெஞ்சில் ஒன்று இந்த வழக்கை விசாரிக்கும். முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால்தான் விடுமுறைக்கால பெஞ்ச் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை என்பது முக்கியமானது.
No comments
Post a Comment