யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களும் சர்வதேச விசாரணைக்குழுவிடம் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு முன்வரவேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் அன்று மான் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று காலை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இக்கோரிக்கையினை விடுத்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உதயன் ஒன்லையினிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கின் தற்போது நிலை தொடர்பாக அவரிடம் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் , இராணுவ ஆட்சியினால் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
இதேவேளை அமெரிக்காவின் முயற்சியினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய அக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் விசாரணைகள் நீதியாக அமையவேண்டும். இவ்வாறு ஒரு விசாரணைக்குழுவை அமைப்பதற்கு முழுமூச்சாக செயற்பட்டமைக்காக அமெரிக்காவிற்கு எமது மக்கள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துள்ளோம்.
ஐ.நா.விசாரணைக்குழுவிடம் தாம் சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தேன். குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதித்தூதுவர் சர்வதேச விசாரணை குழுவிடம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களில் சிலர் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர். அவர்களை போல பாதிக்கப்பட்ட சகல மக்களும் இவ் விசாரணைக்குழுவிடம் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
(நன்றி உதயன்)
Social Buttons