இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட கோரிக்கைகளை சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மீளாய்வு செய்கிறது.
இவ்வருடம் மே மாத முடிவில் சுவிஸின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கீழ்காணும் முடிவுகளை அறிவித்திருந்தது.
அவையாவன:
1.இலங்கை அகதிகளை புதிய மீளாய்வின் அடிப்படையில் திருப்பியனுப்புதல்.
2.இலங்கையின் சமகால நிலமைகள் சார்ந்து புதிய பகுப்பாய்வு செய்தல் மற்றும் அகதி அந்தஸ்துக்கான காரணிகளை இலங்கையின் தற்போதைய நிலமைகளின் அடிப்படையில் தீர்மானித்தல்.
3.இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோருபவர்களை சரிவர மீளாய்வு செய்தல்.
4.2014 இலையுதிர்காலத்திற்குப் பின் கட்டாய நாடுகடத்தலை நடைமுறைப்படுத்தல்.
இலங்கை அகதிகளுக்கு மேற்குறிப்பிட்ட இம்முடிவுகள் கூறும் செய்தி என்ன?
சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கைகளை மீளாய்வு செய்கிறது. இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமை மீறல்கள், மற்றும் அசாதாரண நிலைமைகளால் சுவிஸிலிருந்து திருப்பியனுப்பப்படும் அகதிகள் ஆபத்தை சந்திக் நேரிடுமா என்று பகுப்பாய்வு செய்கிறது.
பகுப்பாய்வின் அடிப்படையில் பெற்ற புதிய நிலைப்பாட்டால் முன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அகதி அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப்படும் சூழலும் அல்லது தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் சூழலும் உள்ளது.
ஏற்கனவே இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றத்தால் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு புதிதாக அகதி விண்ணப்பம் எதையும் கோராதவர்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கடிதம் ஒன்றை எதிர்வரும் நாட்களில் பெறுவீர்கள்.
கடிதங்களை பெறுபவர்கள் 4 கிழமைகளுக்குள் நீங்கள் ஏன் இலங்கை செல்ல முடியாத நிலைமையில் உள்ளீர்கள் என்பதை விளக்குமாறு வேண்டப்படுவீர்கள். உங்களுக்கான சட்ட ஆலோசகர் இருந்தாலும் நீங்கள் தனிப்பட்ட ரீதியாக இது போன்ற கடிதம் ஒன்றை பெறுவீர்கள். இக் கடிதத்தின் பிரதி ஒன்று உங்கள் சட்ட ஆலோசகருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இதுபோன்ற கடிதம் ஒன்றை பெறும்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1.குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கடிதத்தை அனுப்பும் நாளிலில் இருந்து காலத்தவணை (2கிழமை) ஆரம்பிப்பதால், உடனடியாக தபால் நிலையத்திற்குச் சென்று கடிதத்தை எடுக்கவும்.
2.மிகவிரைவாக உங்கள் தனிப்பட்டு சட்ட ஆலோசகரை, அல்லது அகதிகளுக்கான உங்கள் மாநிலங்களில் உள்ள சட்டஉதவி நிலையங்களை நாடவும்.
3. இதுவே உங்களுக்கான இறுதி முடிவெடுக்கும் வாய்ப்பாக இருப்பதனால், உங்கள் அகதி விண்ணப்பம் சார்ந்த அனைத்து முக்கிய விடயங்களையும் உங்கள் சட்டத்தரணிக்கு தெரியப்படுத்தும்.
தயவு செய்து உங்களுடைய முந்திய அரசியற் செயற்பாடுகள் ஒன்றையும் மறைக்காதீர்கள். நீங்கள் கூறாதிருப்பதால் உங்களின் அகதிக்கான காரணிகளை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தால் சரியாக கணிக்க முடியாததுடன், நீங்கள் மறைத்த விடயங்கள் பிற்காலங்களில் தெரியவரும் பொழுது உங்கள் அகதி விண்ணப்பத்திற்கு பாதிப்பாக அமையலாம்.
அத்துடன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட கடிதத்தை பெற நேரிடுவதுடன், சுவிஸை விட்டு நிரந்தரமாக செல்லும் நிலமையும் ஏற்படும். இன்றைய நிலையில் வேறொரு ஐரோப்பிய நாட்டில் அகதி அந்தஸ்து கோரமுடியாது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடிதம் வந்த பின்
1.உங்களுடைய சட்ட ஆலோசகர் அல்லது சட்ட உதவி நிலையம் உங்களை அழைத்து கலந்தாலோசித்த பின் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை எழுதுவார்கள். குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் உங்களுக்கு வழங்கும் 4 கிழமை அவகாசம் போதவில்லையென்றால் கால அவகாச நீடிப்பு மனு ஒன்றை சமர்ப்பித்து கால அவகாசத்தை நீடிக்கலாம்.
2. உங்களுடைய சட்ட ஆலோசகருக்கு நீங்கள் ஏன் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற காரணத்தை விபரமாக கூறினால் அவர் விபரமான அறிக்கை ஒன்றை உங்கள் சார்பாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.
3. நீங்கள் சமர்ப்பிக்கும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் உங்களின் அகதி விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதா, அல்லது நிராகரிப்பதா என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானிக்கும். உங்கள் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படுமாயின் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம்.
4. நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக உங்களுக்கு நிரந்தர (B) அல்லது தற்காலிக (F) வதிவிட அனுமதி வழங்கப்படும். இல்லாவிடின் குடிவரவு, குடிவரவுத் திணைக்களம் உங்களை நேர்முகச் சந்திப்பு ஒன்றிக்கு அழைக்கும்.
நேர்முகச் சந்திப்பில் பல கேள்விகள் உங்களிடன் கேட்கப்படும். அப்பொழுது நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
1.நீங்கள் உண்மையை மட்டும் பேசவேண்டும் (சட்ட ரீதியான கட்டாயம்).
2. நீங்கள் உங்களை விசாரிக்கும் அதிகாரிகளிடம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் (சட்டரீதியான கட்டாயம்). இதன் அர்த்தம் என்னவெனில், அதிகாரிகள் கேட்கும் கேள்விகளிற்கு தெளிவான பதில்களை வழங்குவதாகும்.
இதுவே நீங்கள் உங்களைப் பற்றிய அனைத்தையும் விரிவாகக் கூறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம். இதுபோன்றொரு சந்தர்ப்பம் மீண்டும் வழங்கப்படமாட்டாது.
சில சந்தர்ப்பங்களில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் தம் சார்ந்த அனைத்து உண்மைகளையும் கூறுவதில்லை (உதாரணத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராகவோ, போராளியாகவோ செயற்பட்டிருந்தால்). காரணம் போர்க்குற்றவியல் போன்ற சட்ட சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சமாகும். இப்படி நீங்கள் செய்வதின் ஊடாக அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வழிகளை அமைக்க உதவுகின்றீர்கள்.
அதைவிட நீங்கள் உண்மையை கூறுவதனால், ஆயுதம் தாங்கிய போராளி என்ற அடிப்படையில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டாலும் அதாவது (B) இல்லாமல், அச்சுறுத்தலுக்கு உட்பட்டவர்களுக்கான அகதித் தஞ்சம் (F) வழங்கப்படும். இதைப் பெற்றால் நீங்கள் சிறீலங்கா செல்ல முடியாது.
3.உங்களிடம் நேர்முக விசாரணையை தொடங்குவதற்கு முன் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்குமாறும், தமது விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். அங்கு நீங்கள் தெரிவிக்கும் விடயங்களே உங்களுடைய அகதி அந்தஸ்துக்கான காரணிகளாக அமையும். அங்கு கூறப்படாத புதிய விடையங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4. உங்களுடைய மொழி பெயர்ப்பாளர் மீது நம்பிக்கையீனமயின்மை காரணமாக சில விடயங்களை நீங்கள் சொல்லவில்லை என்றால் உங்கள் சட்ட ஆலோசகர் ஊடாக விசாரணை முடிந்தவுடன் தெரியப்படுத்தலாம். ஆனால் நீண்டகாலம் தாமதிக்காதீர்கள்.
5.சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் உங்களுடைய அகதி விண்ணப்பத்தை பொருட்படுத்தவேண்டுமாயின் நீங்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்க வேண்டும்.
முக்கியமாக விடயங்கள்
1.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களில் உறுப்பினராகவிருத்தல்.
2. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் சொந்தங்களாக இருத்தல்.
3. தமிழீழ விடுதலைப் புலி என்ற சந்தேகத்துடன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால்.
4. பல காலங்களுக்கு முன்பு அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தால,; அது சார்ந்தும் தெளிவாகக் கூறவேண்டும்.
5. சுவிஸில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டால் முழுமையாகக் கூறவேண்டும்.
6. இலங்கை அரசின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடங்கும் அமைப்புக்கள், மற்றும் தனிமனிதர்களுடன் தொடர்பிலிருந்தால் வெளிப்படையாகக் கூறவேண்டும்.
குறிப்பாக இலங்கை அரசு சுவிஸில் உங்களின் செயற்பாட்டை, அல்லது நீங்கள் தொடர்புவைத்திருக்கும் அமைப்புக்கள் மற்றும் தனி மனிதர்களை பின்தொடர்கிறது என்ற விடையங்களையும் கூறவேண்டும்.
7.இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதப் பட்டியலில் முன்னைநாள் தமிழீழவிடுதலைப்புலிகள் மாத்திரமின்றி, கீழக்;குறிப்பிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் உள்ளடங்கிகிறது.
அவையாவன: சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை.
8. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்கள்.
9. ஒரு மதசார் குழுவின் அங்கத்வர் என்ற அடிப்படையில், மனிதஉரிமைச் செயற்பாட்டின் காரணமாக, ஊடகவியலாளர் அல்லது அரசை விமர்சிப்பவர் என்ற அடிப்படையில் அச்சுறுத்தப்பட்டால்.
நீங்கள் பெற்றுக்கொண்ட வதிவிட அனுமதியை ஓர் விவாகரத்தின் காரணமாகவோ, அல்லது குற்றம் புரிந்த காரணமாகவோ இழக்க நேரிட்டால்!
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தொடர்புடைய மாநில ஆட்சிக்கு ((Kanton) தனது முடிவை அறிவிக்கும். சமபொழுதில் சிறீலங்காவில் உங்களுடை தனிப்பட்ட வாழ்வு, பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை சரிவர மதிப்பீடு செய்யாமல் திருப்பியனுப்ப முடியாது என்பதையும் மாநில ஆட்சியிடம் தெருவிக்கும். அத்துடன் உங்களுடைய வதிவிட அனுமதி உடனடியாக பூர்த்தியடையாமலும் பார்த்துக்கொள்ளும்.
மானில ஆட்சி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் உங்களைப்பற்றிய ஆய்வறிக்கை (உங்கள் நிலை சார்ந்து அறிய) ஒன்றை சிறீலங்காவில் மேற்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கலாம்.
மாநில ஆட்சி நிர்ப்பந்திக்காவிடில் உங்களுடைய சட்ட ஆலோசகர் மூலம் மாநில ஆட்சிக்கு உங்கள் சார்ந்த ஆய்வை மேற்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டும்.
இப்படி ஒரு ஆய்வு நடக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய சட்ட ஆலோசகருக்கு ஏன் சிறீலங்க திப்பிச்செல்ல முடியாது என்ற காரணத்தை மிகத்தெளிவாக விளக்க வேண்டும்.
Social Buttons