மன்னாரில் 14 வயதுச் சிறுமி ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் பற்றைக் காட்டுக்குள் கூட்டிச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மன்னார் பனங்கட்டிக்கோட்டு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி (10-08-2014) குறித்த சிறுமியை குறித்த இராணுவ சிப்பாய் சௌத்பார் இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டினுள் கூட்டிச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த இருவர் நேரடியாக கண்டுள்ளனர்.
குறித்த சிறுமியை வவுனியாவிற்கு அழைத்துச் சென்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் பிரச்சினை தொடர்பாக வவுனியா வைத்தியசாலைத் தரப்பினர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் தாய், மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் சௌத்பார் இராணுவ முகாமிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் சௌத்பார் இராணுவ முகாம் அதிகாரிகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் குறித்த இராணுவச் சிப்பாயை காப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளனர்.
குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Social Buttons