Latest News

August 09, 2014

சபரகமுவ பல்கலை.யில் தாக்கப்பட்ட மாணவன் கைது!
by Unknown - 0

சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு, இரத்தினபுரி வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது அறையில் இரவு நெடுநேரம் படித்துவிட்டு, நித்திரையின் பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்து கழிப்பறைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாமல் கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கட்டியிருந்த இரண்டு நபர்களினால் சந்திரகுமார் சுதர்சன் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்.
கைகள், வாய் என்பன கட்டப்பட்ட நிலையில் மாணவர் விடுதியருகில் உள்ள பற்றைக்காட்டில் மயங்கிய நிலையில் இவர் போடப்பட்டிருந்தார்.
பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து விடுதியைச் சென்றடைந்த இவரை சக மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
பின்னர் அவர் அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு சனிக்கிழமை அவர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோதே, அவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்தத் தகவல் கிளிநொச்சி மாவட்டம் பளையில் உள்ள காவல்துறை ஊடாக முகமாலையில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கியுள்ள விடுதியின் கழிப்பறையொன்றில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அங்கு கல்வி கற்கக் கூடாது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உயிரச்சுறுத்தல் விடுத்து, கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்தன.
இரண்டாவது தடவையாக அத்தகைய சுவரொட்டிகள் இரவு நேரத்தில் ஒட்டப்பட்டபோது, அந்தக் கழிப்பறைக்குச் சென்றபோதே இந்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவனாகிய யோகநாதன் நிரோஜன் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை எழுதிக் கொண்டிருந்த போது பரீட்சை மண்டபத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட இந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரது தந்தையாரிடம் சரீரப் பிணையில் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த மாணவனின் கைத்தொலைபேசியில் பயங்கரவாதம் தொடர்பான சில தடயங்கள் இருந்தமையினால் அவரை விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்த காவல்துறையினர், கைத்தொலைபேசி தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்று கூறியதையடுத்து நீதவான் இந்த வழக்கை வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
« PREV
NEXT »