Latest News

August 07, 2014

வட மாகாண சபைக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது!
by Unknown - 0

வட மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்த போதிலும், அது மாகாண சபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் நிதி நிர்வாகம் தொடர்பான மூன்று சட்டமூலங்கள் ஆளுநரின் பார்வை மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தன.
நிதி நியதிச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்த ஆளுனர், கைமாற்று முத்திரை வரிச் சட்டத்தை அங்கீகரித்திருந்ததுடன். முதலமைச்சர் நிதியச் சட்டத்தை மாகாண சபைச் சட்ட விதிகளில் ஒன்றைக் காரணம் காட்டி, நிராகரித்திருந்தார்.
இந்த மூன்று சட்டங்களையும் ஆராய்ந்த வடமாகாண சபை, நிதி நியதிச் சட்டத்தில் உரிய மாற்றங்களைச் செய்து அதனை நிறைவேற்றியிருக்கின்றது.
ஆளுநரினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்த கைமாற்று முத்திரை வரிச்சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சர் நிதிய நிதிச்சட்ட மசோதா, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும் மாகாண சபை அதை சட்டமாக நிறைவேற்றியிருக்கின்றது.
ஆளுநருடன் முரண்பட்ட வகையில் இந்தச் சட்டம் மாகாண அவையில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதன் தேவையையும், அதன் சட்ட நிலைமையையும் கருத்திற்கொண்டு ஆளுநர் அதனை அங்கீகரிப்பார் என்று தாங்கள் நம்புவதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
« PREV
NEXT »