அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல்களின் போது இறந்த இருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை நாகொட வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஹேமன்த்த ஹரிச்சந்திர சில்வா களுத்துறை நீதவான் நீதிமன்றில் மரண விசாரனை அறிக்கையை சமர்ப்பித்து இதனை உறுதி செய்யதார். நீதிமன்றில் விசேட அழைப்பாணையை அடுத்து நேற்று வியாழக்கிழமை உதவி சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் ஆஜரானார்.
தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன் செயல்களின் போது உயிரிழந்த மொஹமட் பைரூஸ், மொஹமட் சிராஸ் ஆகிய இருவரதும் மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
மொஹமட் பைரூஸ் என்பவரின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி மீண்டும் மரண விசாரனையொன்றினை நடத்தும் படி இறந்தவர்களின் உரிமைகளுக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள் கஸ்ஸாலி ஹூசைன் ரமீஷ் பசீர் சிதாரா ஹபுஆரச்சி என்போர் நீதிமன்றில் மனுவொன்றினை முன்வைத்திருந்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட மரண விசாரனை அறிக்கையை கவனத்தில் கொண்டதன் பின்பு சடலங்களை தோண்டி வெளியெடுத்து மீண்டும் மரண விசாரனை நடத்துவது பற்றி உத்தரவு பிறப்பிப்பதாக களுத்துறை மேலதிக நீதவான் அயேசா ஆப்தீன் தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டினால் மரணம் சம்பவித்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை தெரிவிப்பதால் மீண்டும் மரண விசாரணையொன்றினை நடத்துவதற்கான தேவையேற்படாது என இறந்தவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். மேலதிக விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பிட்ட இருவரினதும் மரணங்கள் வாள்வெட்டு காயங்களினால் சம்பவித்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Social Buttons