முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 16 கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 1183 ஏக்கர் விவசாய நிலம் படையினர் வசமுள்ள நிலையில் உள்ளது.
இந்த நிலையில் 313குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான விவசாய நிலம் இல்லாத நிலையில் தாம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆண்டான் குளம், திருக்கோணம்பட்டி, வன்னிசியார் வயல் வெளி, விண்ணன்கம் வயல்வெளி, ஆத்தங்கடவை, மருதடிக்குள வயல்வெளி, ஆலக்குளம், சாமிப்பிலக்கண்டல் ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நிந்தகைக்குளம், புளியமுனை, நீராவி, உலாத்துவெளி, நீராவி வயல், வட்டுவன், ஆகிய கிராமங்களிலிருந்து,2009ம் ஆண்டு போர் காரணமாக மக்கள் முழுமையாக வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் மக்களுடைய நிலங்களில் முகாம்களை அமைத்து படையினர் தங்கியிருந்தனர். பின்னர் 2011ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் மீள்குடியேறிய நிலையிலும், மக்களுடைய நிலங்கள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமல்,உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், தற்காலிக முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும், மீள்குடியேற்றத்திற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 15ம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச செயலக,ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையிலும் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
Social Buttons