Latest News

July 31, 2014

வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களின் ஆதரவை இழக்கும் அரசாங்கம்!
by Unknown - 0

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் அங்கு வாழ்ந்து சிங்களவர்களை கொண்ட குழுக்கள் தற்போது அமைதியாக இருந்து வருவதாக தெரியவருகிறது.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இதனை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
அங்கு இலங்கைக்கு எதிராக வீதி நாடகங்களை நடித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் மாத்திரமல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள பொதுநலவாய நாடுகளை சேர்ந்த மக்கள் உட்பட உலக மக்களின் கவனத்தை ஈர்க்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, அதற்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். எனினும் இம்முறை அப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் அந்த அமைப்பு நடப்பு தலைவர் கலந்து கொள்வது சம்பிரதாயமானது. எனினும் கிளாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வரலாற்று சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.
புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தயாராக இருந்த போதிலும் ராஜபக்ச அரசாங்கத்தின் குறைபாடுகள் காரணமாக , அவர்களின் முயற்சி வலுவற்றதாகி போனதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த இலங்கையர்களின், இலங்கையில் வாழும் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் இந்த செயலானது வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாட்டுக்கு அந்நிய செலாவணிகளை ஈட்டித் தரும் இலங்கையர்களை அவமதிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கையாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்பன மறுக்கப்படுகின்றமை, அரச பாதுகாப்புடன் இனவாத குழுக்கள் இனவாத வன்முறைகளை ஏற்படுத்தி வருவது ஆகிய காரணங்களினால் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
« PREV
NEXT »