இன்று காசா என்ற 18 கிலோ மீற்றர் அதிகபட்ச நீளம் கொண்ட 360 சதுர கிலோ மீற்றர் பரப்பு கொண்ட குறுகிய நிலபரப்புக்குள் பாலஸ்தீனத்து அப்பாவி பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள். 20,000 பேர் வரை இடம்பெயர்ந்தும் சுமார் 300 பேர் கொல்லப்பட்டும் உள்ளார்கள்.
நம் நாட்டில் நடந்த இறுதி யுத்தத்தில் இதைவிட பெருந்தொகையானோர் கொல்லப்பட்டார்கள். நம் நாட்டில் நடந்த அந்த யுத்தத்தை கைதட்டி ஆதரித்தவர்கள் இங்கிருக்கின்றார்கள். நமது நாட்டிலே எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அதை கண்டு காணாமல் இருந்து விட்டு, உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ கொல்லப்படும் மக்களுக்காக மட்டும் குரல் எழுப்பி முற்போக்குவாதியாக என்னை காட்டிக்கொள்ள என்னால் முடியாது. இதைவிட குறுகிய நிலபரப்புக்குள்தான் எங்கள் மக்கள் வன்னியிலே கண்மூடித்தனமான தாக்குதல்களால் கொல்லப்பட்டார்கள். நமது மக்கள் கொல்லப்பட்டபோது, எங்களை எவரும் திரும்பிகூட பார்க்கவில்லை. எங்கள் பெண்களும், குழந்தைகளும் உயிரை இழந்து, அங்கங்களை இழந்து துடிதுடித்தபோது எவரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. கொஞ்சம் திரும்பி பார்த்தவர்களும் நன்றாகவே கடைசி காட்சியில் நடித்தார்கள்.
ஆனால், இன்று நான் நடிக்கவில்லை. பாலஸ்தீனத்து அப்பாவி மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்படுவதை நாம் கண்டிக்கின்றோம். அங்கே கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளும், தாய்மார்களும், வயோதிபர்களும் எங்கள் மக்கள் என்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. நித்திரையில் இருந்து உடனடியாக எழுந்து வந்து இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்தும்படி ஐநா சபையை கோருகிறோம் என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.
பலஸ்தீனத்து நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பு நிப்போன் விடுதியில் நடைபெற்றது. சிறிதுங்க ஜெயசூரிய, வண. சீலரதன தேரோ, அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் மனோ கணேசன் சிங்கள, தமிழ் மொழிகளில் மேலும் கூறியதாவது,
போராளிகள் சண்டையிட பயிற்சி பெற்று ஆயுதங்களுடன் மரணத்தை சந்திக்க தயாராகவே வருகிறார்கள். ஆனால், அப்பாவி மக்கள் அப்படியில்லை. ஆகவே போரில் நேரடியாக சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் கொல்லப்படுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பலஸ்தீனர்களோ, ஈராக்கியர்களோ, ஆப்கனிஸ்தானியர்களோ, இலங்கையில் தெற்கில் சிங்களவர்களோ அல்லது வடக்கில் தமிழர்களோ, கொல்லப்படும் சாதாரண அப்பாவி மக்கள் எவராக இருந்தாலும் அனைத்து மனிதபடுகொலைகளையும் நாம் எதிர்க்கின்றோம். தாக்கப்படவிருக்கும் இலக்கை தெளிவாக அறிந்துகொண்டுதான் தாக்குதல் நடத்துகின்றோம் என இஸ்ரேல் சொல்லுகிறது. இப்படித்தான் எல்லா சர்வதிகார ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள். ஆனால், தாக்குதல்கள் நடத்தப்படும்போது அப்பாவி மக்கள் பெருந்தொகையில் கொல்லப்படுகிறார்கள்.
உலக வரைப்படத்தில் காசா எங்குள்ளது என இந்நாட்டில் சாதாரண மக்களுக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனம் என்ற பெயர் நன்கு தெரிந்தது. இந்த நாட்டு ஜனாதிபதி இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவர். அந்த நாட்டில் இவர் பெயரில் ஒரு வீதி பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று நட்பு காணாமல் போய் விட்டது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குசலம் விசாரித்ததோடு சரி.
இலங்கை யுத்தம் நடந்தபோது அதில் மனித படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாமல் ஐநா சபை தோல்வியடைந்துவிட்டது என ஐநா பொதுசெயலாளர் நியமித்த ஆய்வு குழு சொன்னது. அதன்பிறகு இத்தகைய நிகழ்வுகளின்போது முறையாக நடந்துகொள்ளும் பாடத்தை இலங்கை யுத்தத்தின் மூலமாக கற்றுகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது என ஐநா சொன்னது. அப்படியானால் இன்று ஐநா எங்கே? பலஸ்தீனிய படுகொலைகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எதுவும் நமது நாட்டிலும் கிடையாது. ஐநாவிலும் கிடையாது.
Social Buttons