Latest News

July 17, 2014

இலங்கையில் முதலிட்டுள்ள, முதலீடு செய்யவுள்ள வர்த்தகர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
by Unknown - 0

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று முதலீடு செய்யும் வர்த்தகர்களுக்கு பிரித்தானியா எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால். நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இது பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், பிரித்தானிய வர்த்தகர்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதுகாப்பு மற்றும், அரசியல் அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டில் பாதுகாப்பு சவால்களின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. எனினும், அங்கு செயற்படும் பெருமளவு நிறுவனங்கள் பிரச்சினையின்றி ஏற்றுமதிகளை மேற்கொள்கின்றன.
வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றும் என்பதைப் பொறுத்தும், முன்னர் போர் நடந்த பகுதிகளின் மீள் அபிவிருத்தி, மற்றும் மத அடிப்படைவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்துமே, எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் நீண்டகால நோக்கில், அரசியல் மற்றும் பொருளாதார ஆபத்துகள் அமையும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வர்த்தகத்துக்கு தீவிரவாதிகளிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை.
2009ல் ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், குறுகியகால, நடுத்தரக் கால தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாமல் போய் விட்டது.
முன்னாள் போர் வலயங்களை அரசுப் படைகள் பலமான கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அங்கு கிளர்ச்சிக்கு சிறிய வாய்ப்பே உள்ளது.
ஏனைய தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் ஊழல் குறைவாக இருந்தாலும், அங்குள்ள வர்த்தகர்களுக்கு ஊழல் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. கொள்வனவுகளில், ஊழல் மிக அதிகமாக இடம்பெறுகிறது.
அரசாங்க பேரங்களிலும், காவல்துறை, உள்நாட்டு இறைவரி, சுங்கம், உள்ளிட்ட வர்த்தகத்துடன் தொடர்புடைய துறைகளில் ஊழல் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கையில் வர்த்தகம் செய்யும், பிரித்தானிய நிறுவனங்கள், ஊழல் மற்றும் மோசடிகளை எதிர்கொள்வதற்கான மூலோபாயத்தை வகுத்துக் கொள்ள பிரித்தானியா ஊக்குவிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »