Latest News

June 20, 2014

அற்புதங்கள் நிறைந்த வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் திங்கள் பொங்கல் விழா
by admin - 0

வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் 23.6.13 திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக இடம்பெற உள்ளது.
அதனை ஒட்டி ஆலய வரலாற்றுக் கட்டுரை இங்கே பிரசுரமாகிறது,
இலங்கைத் திருநகரத்தின் இதயபூமியாக கருதப்படுகின்ற வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம் பிரதான வீதியில் 208 ஆவது கிலோ மீற்றரில் மேற்காக உள்ள வீதியில் 4 கிலோமீற்றர் சென்று சேர்ந்துவிட்டால் மருதநிலத்தையும் முல்லை நிலத்தையும் நம்கண்ணெதிரே கொண்டுவந்து நினைவு கூரவைக்கும் அமைதியே நிரம்பப் பெற்றதும் தன்னைச் சார்ந்தவர்க்கெல்லாம் எந்நேரமும் தன் ஒப்பற்ற திருக்கருணையினால் அருளைப் பொழிந்து மானுடத்தின் முற்பிறவியிலே செய்து கொண்ட கர்மவினைகளை எல்லாம் கணப்பொழுதிலே நீக்கி மனிதர்களுக்கே உரியதான செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களில் ஏற்படுகின்ற தோஷங்களை எல்லாம் நிவர்த்தி செய்து இவ்வுலக வாழ்க்கையில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உறுதுணையாக விளங்குகின்ற ஸ்ரீ நாகதம்பிரானின் ஆலயத்தைத் தரிசிக்கலாம்.
கிட்டத்தட்ட 400 வருடங்கள் பழமையானது எனக் கருதப்பட்டாலும் கலாநிதி. சி.பத்மநாதன் அவர்கள் தனது புளியம்பொக்கணை பற்றிய கட்டுரையில் இலங்கையில் நாகவழிபாடு பற்றிக் குறிப்பிடுகையில், 17 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகிறார்.
அக்காலப் பகுதியிலே கரைச்சி பகுதியிலே யாழ்ப்பாணம், இடைக்காடு என்னும் இடத்திலிருந்து வந்து விவசாயம் செய்தவரான முருக உடையார் என்னும் பெயருடைய ஒரு உயர் சைவமரபிலே வந்தவர் தனது இல்லத்தரசியான வள்ளியாத்தா என்பவரோடு வாழ்ந்துவரும் காலத்தில் அவருக்கு முதலில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
சிறிது காலத்தின் பின் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. முதலில் பெண் குழந்தையும் பின்னர் ஒரு நாகமும் தோன்றின.
பெண்குழந்தைக்கு நாகாத்தை என்றும் நாகத்திற்கு நாகம்மா என்றும் பெயரிட்டனர். நாளடைவில் அவை வளர்ந்து ஆளான போது முருக உடையாரும் வயோதிபமாக தனது செல்வங்களை பகிர்ந்து பிள்ளைகளுக்கு கொடுக்க எண்ணி நாகம்மா தவிர்ந்த ஏனையோருக்கு பகிர்ந்த சமயம் நாகம்மா கோபித்து பகிர்ந்து வைக்கப்பட்டிருந்த அணிகலன்கள் முதலானவற்றை சிதறிவிட முருக உடையார் இதனைப் புரிந்துகொண்டு தனது செல்வங்களை நான்காக பகிர்ந்து கொண்டார்.
இதன்பின் தனது பங்கினை நாகம்மா சகோதரியான நாகாத்தைக்கு தனது பங்கையும் கொடுத்து இருந்த நேரத்தில் நாகாத்தைக்கும் விவாகம் செய்து கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்குக் குழந்தைகள் பிறந்து வளர நாகம்மாவும் தனது இனத்தில் ஒரு நாகத்தைச் சேர்ந்து பல குட்டிகளை ஈன்று அந்த வீடு பட்டி தொட்டி எல்லாம் ஊர்ந்து திரிந்து நாகாத்தையின் பிள்ளைகள் மீதும் ஊரத் தொடங்கின. ஆயினும் அவை எதுவித தீங்குகளையும் இளைக்கவில்லை.
ஆனால் இதைக் கண்டு கோபங்கொண்ட நாகாத்தை அவ்வாறு ஊர்ந்த பாம்புகளை விளக்குமாற்றினால் கூட்டித் தள்ளி சனியனே தொலைந்து போங்கள் என்று சாபமிட அவையும் அவ்வூரைவிட்டு ஊர்ந்து புதூரை அண்டிய குருக்கள்குளம் பகுதியிலே உள்ள நாகஞ்சோலையில் உலாவிய சமயத்தில் கனவிலே வந்து தன்னை ஆதரிக்குமாறு புதூரிலே வசித்துவந்த குமாராத்தைப் பிள்ளையின் கனவிலே உணர்த்தியதை தனது தமையனிடமும் ஏனையோரிடமும் எடுத்துக் கூறி அந்நாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட தற்போது தலவிருட்சமாக உள்ள பாலைமரத்தையும் அதற்குள் உறைந்திருந்த நாகத்தையும் கண்டு இருவருமாக பந்தலிட்டு பால், பழ நிவேதனம் கொடுத்து வழிபடலாயினர்.
மிக அண்மைக்காலம் வரை புளியம்பொக்கணையிலிருந்து கோபம் கொண்டு நாகம் ஊர்ந்து வந்த பாதை புல் பூண்டு முளைக்காத நிலமாக இருந்த அடையாளம் பற்றி கூறியுள்ளார்கள். ஆனாலும் புளியம்பொக்கணையின் தல புராணத்திலே புளியம்பொக்கனை நாகதம்பிரானை வன்னிய வேளாளரான நீதிநாயக்க மாப்பாண முதலியார் வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 400 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கொள்ளப்படுகின்ற இவ்வாலயம் தோற்றம் பெற்றதற்கான மரபுவழி வரலாறுகளும் சான்றுகளும் இவ்வாலயத்திற்கு உண்டு. புதூர் என்னும் குக்கிராமத்திற்கு வடக்கே 2மைல் தூரத்தில் புதுவிளாங்குளம் என்னும் சிறிய கிராமத்தை அடையலாம்.
ஆதியில் அங்கு வாழ்ந்தவர்களுள் சிதம்பநாதர் என்னும் ஒரு சிறந்த சைவவேளாள குலத்திலே பிறந்தவர் பின்னாளில் அவர் உடையாராகவும் இருந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். இவருக்கு இருபுதல்வர்கள் மூத்தவர் பெயர் குலசேகரம் என்பதும் இளையவர் குமாரத்தைபிள்ளை என்பதும் இவர் விவாகம் செய்து கொண்டு புதூர் என்னும் ஊருக்கு வந்து அங்கே வசித்து வருகின்ற நாட்களில் கனவிலே ஸ்ரீ நாகதம்பிரான் நாகமாக ஊர்ந்து காட்சி கொடுத்து தான் உறைந்திருக்கின்ற இடத்தையும் உணர்த்தி தன்னை ஆராதிக்குமாறு உணர்த்தியதை தன் தமையனான குலசேகரருக்கு இவ்வாறு புதூரை அண்டிய குருக்கள்குளம் என்றும் கிராமத்தை சூழ்ந்துள்ள சோலையிலே நாகதம்பிரான் இவ்வாறு காட்சி கொடுத்து உணர்த்தியதை எடுத்துக்கூறி இருவருமாகக் சேர்ந்து தற்போதுள்ள கோயில் வளாகத்தினுள் இருக்கும் பாலைமரப் பொந்தினை அடையாளம் கண்டு அவ்விடத்திலே ஒரு மரப்பந்தர் அமைத்து பொங்கல் பூசைகள் செய்து வரலாயினர்.
அக்காலம் தொடக்கம் அங்கு அந்தப் பாலைமரப்பொந்தில் உறைந்திருக்கின்ற நாகத்திற்கு பசும்பாலுடன் கப்பல்வாழைப் பழமும் கலந்து வைத்து பூசித்து வந்தனர். நாகமும் இவர்கள் அளித்த நிவேதனத்தை ஏற்றுக் கொண்டது. அன்று தொடக்கம் இன்றுவரை இது தினந்தோறும் நடைபெற்று வருவதையும் இதற்கான மரபுவழி வழிபாட்டு முறைகளுடன் கூடியவிதத்தில் ஆலய அர்ச்சகர்கள் செய்து வருவதையும் காணலாம். நாகதம்பிரானும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுகிறார்.
nakathampiran
இதன் காரணமாக இங்கு பரம்பரையாக வந்தவர்களே இக்கோயிலின் நித்திய கருமங்களை செய்யவேண்டியவர்களாக உள்ளனர். எவ்வளவுதான் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ நாகதம்பிரான் அவர்களிடமிருந்தே தனது நிவேதனத்தை பெற விரும்புகிறார். இதனால் அவர்களை ஒருபோதும் புறம்தள்ள முடியாது. இன்றுவரை இவ்வாறு நடைபெற்று வருவதை நாம் பரம்பரை வழியாக அறிந்துகொண்ட முறைப்படி கண்டுகொள்ளலாம்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த வழிபாடு இவரின் மகனான ஆறுமுகம் என்பவரும் அவரின் பின்னர் அவரது ஐந்து புதல்வர்களான:
1. இராமுப்பிள்ளை
2. நாகமுத்து
3. தம்பு
4. கார்த்திகேசு
5. வல்லிபுரம்
ஆகியோராலும் பூசிக்கப்பட்டு வந்தது.
இவர்களுடைய காலத்தில் இவ்விடத்தில் ஒரு கோவிலை அமைக்க எண்ணியவர்கள் பாலைமரத்திற்கு அருகாக ஒரு சிறு மடாலயத்தை அமைத்து அதில் நாகதம்பிரானின் விக்கிரகங்களை வைத்து அதனை மூலமூர்த்தியாக கொண்டு வழமை யான பூசை பொங்கல் முதலியவற்றை செய்து வரலாயினார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயத்தின் சுவர்களுக்கருகில் பொந்துகளுடன் கூடிய புளியமரங்கள் இருந்த காரணத்தால் இங்கு வந்தமர்ந்த நாகதம்பிரான் புளியமரங்களிலும், பாலைமரத்திலுமாக மாறிமாறி அமர்ந்திருந்தும் அமைக்கப்பட்ட ஆலயத்தினுள் பிரவேசித்துக் காட்சி கொடுத்தும் அடியவர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஆயினும் இவரது நிவேதனம் பாலைமரப் பொந்தினுள்ளேயே கொடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமுமாகவே புதிய கோவில் கட்டும்போது இம்மரங்கள் தறித்து அகற்றப்பட்டன.
இவ்வாறான காலங்களில் நாகதம்பிரானின் கீர்த்தியும், புகழும் அயல் கிராமங்களையும் கடந்து வடக்கு, கிழக்கு மற்றும் நாடெங்கும் பரவி வருகின்ற பக்தர்கள் தொகையும் அதிகரிக்க சிறிதளவு வருவாயும் கிடைக்கப்பெறவே 5 சகோதரர்களும் ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில் பூசை பொங்கல் கருமங்களை செய்து வந்தனர்.
ஆயினும் வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படுகின்ற பொங்கல் விழாவை அவர்களது குடும்பத்தில் உள்ள மூத்தவரே பிரதம பூசகராக நின்று செய்து கொடுப்பது இங்கு எழுதாத விதியாக இருந்தது. அவ்வாறு அப்பொங்கலின் மூலம் கிடைக்கின்ற வருவாயையும் அந்த வருடத்திற்குரியவரே பெற்றுக்கொள்வார்.
இவ்வாறு பல சிறப்புகளும் அற்புதங்களும் பெற்று இவை இலங்கைத் திருநாடெங்கும் பரவி பக்தர்களும் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வேளையில் மூத்த தலைமுறையினரான இராமுப்பிள்ளை, தம்பு, கார்த்திகேசு ஆகியோர் சிவபதமடைய நேர்ந்தபோது இவர்களின் குடும்பங்களில் இருந்து பூசைக்கு தகுதியானவர்களாக
இராமுப்பிள்ளையின் மகன் குமாரையாவும்
தம்புவின் மகன் இராசையாவும்
கார்த்திகேசுவின் மகன் பரராசசிங்கமும் இவர்களுடன் முன்னைய தலைமுறையினரான நாகமுத்து
வல்லிபுரம் ஆகியோரும் சேர்ந்து ஐந்து பேரும் வழமை போன்று கோவில் கருமங்களையாற்றி வந்தனர்.
இப்படியான சூழ்நிலையில் ஆலய வளாகத்தினுள் பொந்துகள் நிறைந்ததான புளியமரங்களும், பூவரச மரங்களும் வளர்ந்து விருட்சமாகி அவற்றின் வேர்கள் ஆலய சுவர்களையும் பெயர்த்துவிடும் அளவுக்குவந்தபோது பூசகர்களும் மற்றுமுள்ளோரும் சேர்ந்து ஆலயத்தைப் புனரமைக்க எண்ணினர்.
எனவே இதனை புளியங்குளம் கிராமத் தலைமைக்காரர் ஊடாக பிரிவுக் காரியாதிகாரி அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு அவரது தலைமையில் எல்லோரும் ஒன்றுகூடி ஆலயத்தைப்புனரமைப்பது என்று தீர்மானித்தனர். இதன் முன்னோடியாக நிர்வாகசபை ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
பிரிவுக் காரியாதிகாரி அவர்கள் அவருடைய அலுவலர்கள் மற்றும் பிரிவில் உள்ள ஏனைய துறை சார்ந்த உத்தியோகத்திர்கள் எல்லோரும் வருடாந்த பொங்கலின் போதும் மற்றும் நேரங்களிலும் தங்களது அளப்பரிய சேவை காரணமாக திருப்பணி நிதியும் தாராளமாகவே கிடைக்கப்பெற்றது. திருப்பணி வேலைகளும் வேகமாக நடைபெற்றது மூலஸ்தானம், மணிக்கூட்டுக்கோபுரம் என திருப்பணிகள் நிறைவடைந்து , மேலும் காலம் தாழ்த்துவது சரியல்ல என்ற காரணத்தினால் 1966ம் ஆண்டு முதலாவது குடமுழுக்கு விழா இனிதே நிறைவு பெற்றது.
இப்பெரும் கைங்கரியத்தையும் சிவஸ்ரீ. வே.தியாகராசா குருக்கள் ஐயாவே நிறைவேற்றி வைத்தது. எம் எல்லோருக்கும் இரட்டிப்பு மன நிறைவைத் தந்தது என்றால் மிகையாகாது. அக்காலத்தில் வன்னிப் பகுதியில் இருந்த ஓரிரு ஆலயங்களின் முக்கியமான கிரியைகள் எல்லாம் தியாகராசாக் குருக்களாலேயே நடாத்தப்பட்டது. என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
இவ்வாறு 1966 ஆவணி மாத திருவோண சுபதினத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று அரைமண்டல அபிஷேகங்களும் நடைபெற்று முடிவில்;, சங்காபிஷேகம், உற்சவம் என்பனவும் நடைபெற்றன. இதேபோன்று கோவில் உரிமையாளர்களிடத்திலும் சிறிது மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின. இதுகால வரையும் திருப்பணிக்காக தமது பொங்கல் வருவாயை விட்டுக் கொடுத்தவர்கள் கும்பாபிஷேகம் முடிவடைந்ததும். மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள்.
இத் தருணத்தில் அதிகாரிகள் மற்றுமுள்ளோர் கூடி ஒரு சமரசத்திற்கு வந்து வருவாயின் ஒரு பகுதியை திருப்பணிக்கு என வங்கியில் வைப்புச் செய்வது எனவும் மீதியை உரிமையாளர்கள் பெறுவது எனவும் முடிவாகியது.
இக்காலத்தில் பிரிவுக் காரியாதிகாரியாக இருந்த திரு.ஜெ.செந்தில்நாதன் அவர்களுக்குப் பின் திரு.கு.கிட்ணர், திரு.யு.மு. பத்மநாதன், திரு. நீலகண்டன், திரு.குணநாயகம், திரு.பாலசுந்தரம், திரு.P.பத்மநாதன், திரு.ஐயம்பிள்ளை ஆகியோர் தங்கள் பதவிக் காலங்களில் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது திரு.பரந்தாமன் அவர்களும் தமது பங்களிப்பை நல்கி வருவது காலத்தின் தேவையாக இருந்து வருகிறது.
இவர்களுடன் கிராம அலுவலர்களான திரு.மு.தம்பித்துரை, திரு.க.உ.இராமநாதன், திரு.கா.நாராயணப்பிள்ளை, திரு.க.தம்பிராசா ஆகியோரும் தங்களது பெறுமதிமிக்க பங்களிப்பை நல்கிஉள்ளார்கள். அந்தவரிசையில் திரு.நா.யோகராஜா, திரு.ச.தணிகாசலம், திரு.வே.கனகவேல்ராஜன், திரு.மரியசீலன், செல்வி.பத்பரூபி யோகராஜா, திருமதி.தனுஷா வசீகரநாதன் ஆகியோரும் தொடர்ந்து தங்களது சேவையையும் ஒத்துழைப்பையும் இவ்வாலயத்திற்கும், ஆலய பரிபாலனசபையினருக்கும் தந்துதவி வருகின்றார்கள்.
தற்போது மூத்த தலைமுறைகள் எல்லோரும் மறைந்து இளம் தலைமுறையினர் கோவிலின் செயற்பாடுகளில் பங்கேற்று வரும் நிலையில் பலவித திருப்பணி வேலைகள் மற்றும் செயற்பாடுகள் காலத்திற்கு ஏற்றவகையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இங்கு வருடம் ஒருமுறை நடைபெறும் பொங்கல் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் பொங்கலுக்கான பூசைப் பொருள்கள் உரிய முறைப்படி எடுத்து வரப்படும். இதில் சில பாரம்பரியமுறைகள் கைக்கொள்ளப்படுவதுண்டு. இதனை மடைப்பண்டம் எடுத்தல் என அழைக்கப்படுகின்றது. இவற்றை எடுத்து வருவதற்கு ஆலயத்துடன் பரம்பரையாக தொடர்புபட்டவர்களே இடம்பெறுவர். இதுவும் இங்கு மாற்றப்படாத ஒரு முறையாக இருந்துவருகிறது.
ச.தணிகாசலம்-
« PREV
NEXT »