Latest News

June 20, 2014

புலம் பெயர் தமிழர்களுக்கு ஆரம்பித்தது ஆபத்து! தப்பிப்பது எப்படி…
by admin - 0

உள்நாட்டில் தமிழர் அரசியலில் செல்வாக்கும் தாக்கமும் செலுத்தி வருபவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, 2002ம் வருடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்ட பட்டியலே, அதுவென்று சிறீலங்காவின் பாதுகாப்புதுறை கூறினாலும், அதனை முழுமையாக நம்பி விடவும் முடியாது.
ஜெனிவாவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னணியில், 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகளை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து அவற்றின் செயல்பாடுகளை இலங்கைக்குள் முடக்கியுள்ளதுடன், அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் புலம்பெயர்ந்து வாழும் 424 தமிழர்களை இலங்கைக்குள் பிரவேசிக்கவும் சிறீலங்கா அரசு தடை விதித்துள்ளமை யாவரும் அறிந்ததே.
நடப்பாண்டில், ஜெனிவாவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் விவாதத்துக்கு விடப்பட்ட பின்னர், வடக்கில் விடுதலைப்புலிகளை தேடும் நடவடிக்கையின் பெயரால், அரச படையினரின் திடீர் சுற்றி வளைப்புகள், கெடுபிடிகளால் பலர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,
இப்போதும் பலர் கைது செய்யப்பட்டு அன்றி, கடத்தப்பட்டு ஓரிரு நாட்களின் பின்னரோ ஒரு சில மணித்தியாலங்களின் பின்னரோ விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது?
போர்க்காலத்தை நினைவுபடுத்தும், அவசர கால நிலையை ஒத்த இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்படுபவர்கள் அல்லது கடத்தப்படுபவர்கள், வவுனியா சிங்கள பிரதேசசபைக்கு பின்புறமாகவுள்ள வாடகை வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் (TID) தடுத்து வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவருக்கு நன்கு பழக்கமான (தொடர்பிலுள்ள) புலத்திலுள்ளவர்களுடன் Skype Video மூலம் பேச வைக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள், ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் கூட விடுவிக்கப்படுவதால், இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இங்குள்ள அவர்களது பெற்றோர்கள், உறவினர்களுக்கு கூட அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்படுவதால் இவர்கள் வீடு சென்று தம் பெற்றோர் உறவினர்களிடம் எதனையும் கூறுவதில்லை. வழமை போல வேலைக்கோ, இதர அலுவல்களை கவனிக்க சென்று திரும்பியவர்களாகவோ, தம் பெற்றோர்கள் உறவினர்கள் முன்பாக நடிக்க வேண்டியிருக்கிறது.
ஆதலால் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள், ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு சூழ்நிலை கைதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற ஒரு முற்றுகைச்சூழலுக்குள் அவர்கள் அகப்பட்டுள்ளார்கள். அரச பயங்கரவாதத்தின் பிடிக்குள் இறுகி, இழுப்புக்கு இஸ்டப்படி ஆடப்பணிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய அசாதாரண சூழலுக்குள் நெருக்கடிக்குள் ஆபத்துக்குள் இருந்து கொண்டு, உங்களுடன் Skype Video மூலம் உரையாடுபவரை “துரோகி” என்று எவரும், அவ்வளவு இலகுவில் சொல்லி விட்டுப்போக முடியாது.
கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் தம் பெற்றோர்கள் உறவினர்களிடத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பிறிதொரு இடத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை, ஆகையால் பின்வரும் உத்திகளை கையாள்வது கூடியளவில் நன்மை பயக்கும்! பாதுகாப்பளிக்கும்!
நீங்கள் செய்ய வேண்டியது…
புலத்திலிருந்து அகத்திலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களுடன், வேண்டப்பட்டவர்களுடன் Skype Video மூலம் பேசுகின்றீர்கள் என்றால், முதலில் Background ஐ அவதானியுங்கள். அடுத்து Skype Video Camera ஐ இடம் வலம், மேலே கீழே என்று உங்கள் சந்தேகம் தீரும் வரை நாலாபுறமும் சுழற்றி காட்டச்சொல்லுங்கள்.
குறித்த நபருடன் வழமையாக நீங்கள் பேசும் போது அவதானித்தவற்றுக்கு, முரணான மாறுபட்ட சூழலை Background இல் உங்களால் அவதானிக்க முடிந்தால், “கொஞ்சம் பிஸியாக இருக்கிறன். நாளைக்கோ, சிறிது நேரத்துக்கப்புறமோ நானே உங்களை அழைக்கிறேனே” என்று, அப்பிடி இப்பிடி என்று ஏதாவது காரணங்களை கூறி Online உரையாடலை நிறுத்தி விட்டு, வேறு வேலைகளை கவனிக்கப்போய் விடுங்கள்.
வழமைக்கு மாறான சூழல்களை உங்களால் அவதானிக்க முடியாமல் போய் விட்டால், உரையாடலுக்கு முன்பே “அம்மா எங்க? தங்கச்சி எங்க?” (வழமையாக நீங்கள் முதலில் யாரை நலம் விசாரிப்பீர்களோ அவர்களை கேளுங்கள்) அதற்கு, குறித்த நபரால், “அவா பக்கத்து வீட்ட போயிருக்கா. அவள் ரீயூசனுக்கு போயிருக்காள்” என்று பதில்கள் கூறப்பட்டால், அதாவது “தற்சமயம் அவர்கள் இல்லை” என்பதை ஒத்த பதில்கள் கூறப்பட்டால், அதனை அவ்வளவு இலகுவில் நம்பி விடாதீர்கள். “அவர்கள் வந்த பிறகு எடுக்கவும்” என்று கூறுங்கள்.
Skype Video வில், நீங்கள் உரையாடும் நபரின் முகத்தில், பேச்சில் ஒரு வித பதட்டம், கண்களில் மிரட்சி தெரிந்தால், குறித்த நபர் ஏதோவொரு அசாதாரண சூழலுக்குள் இருக்கிறார் என்பதை நீங்களாகவே ஊகித்து விளங்கிக்கொண்டு, தொடர்பை துண்டித்து விடுங்கள். (சூழ்நிலைக்கைதியாக இருக்கும் ஒருவர், அதை பேச்சில் சொல்ல முடியாமல், தன் உடல் அசைவுகளாலும் முகபாவங்களாலும் மட்டுமே அதனை உங்களுக்கு வெளிப்படுத்த முடியும்)
(A)நீங்கள், B என்பவருடன் வழமை போன்றே உரையாடுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்போது நீங்கள் B யிடம், “எங்கடா C ய கண நாளாக்காணோம்” என்று பேச்சுவாக்கில் கேட்டு விட்டாலே போதும். மறுநாள் “யார் அந்த C? A க்கும் C க்கும் என்ன தொடர்பு?” என்று வலை வீசி தேடி கண்டுபிடித்து, C என்பவர் புலத்தில் யார் யாருடன் தொடர்பிலிருக்கிறாரோ, அவர்களுடன் பேச வைக்கப்படுகின்றார். இப்படி ஒருவர் மாறி ஒருவராக பேச வைக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு, புதிய பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கின்றது.
எனவே C, Dஆகி, D, E ஆகி, நாளை இது நமது அறியாமையால் Z வரை நீளத்தான் போகின்றது. ஆகையால் “காக்க காக்க, உன்னைக்காக்க, என்னைக்காக்க, மண்ணைக்காக்க” புத்திசாதூர்யமாக விரைந்து செயல்படுங்கள். விடுதலை வேண்டுமாயின், அதற்கு முதலில் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும். நீங்கள் உண்மையான விடுதலை விரும்பியாக இருந்தால், விழித்திருங்கள்! விழிப்பாயிருங்கள்!
சிலர் இதை ஒரு பெருட்டாக கருதா விட்டாலும் நாம் சிலராவது அக்கறையுடையவர்களாக இருந்தால் பலரைக் காக்க முடியும் காரணம் இன்று இலங்கை அரசு பலவித இரகசிய வேலைகளில் தமிழர்களை முடக்குவதில் ஆர்வமாக இருக்கிறது அதில் ஒன்று தான் இது தப்பிக்க வழியும் உண்டு தப்பிக்க முடியுமா முயற்சியுங்கள்
« PREV
NEXT »