இராணுவத்தினர் முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் பத்து ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.
குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர், உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இதேவேளை வடக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும் அதனை தாண்டி தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
Social Buttons