Latest News

June 04, 2014

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
by admin - 0

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை,இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா, இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும், தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும், பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும், 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும், என்றெல்லாம் கோரியிருக்கிறார்.

நதி நீர்ப் பிரச்சினைகள்

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் நதிநீரை 142 அடிக்கு உயர்த்துவதைக் கண்காணிக்க மத்திய நீர் ஆணையப் பிரநிதியை நியமிக்க வேண்டும், நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் வேண்டும், தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மனுவில் அடங்குகின்றன.
தமிழகத்தில் மீன்பிடி உரிமைகளை பல்வேறு விதங்களில் விரிவாக்க 1520 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும், மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், மின் தொடரமைப்புக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாசனம், பள்ளிக்கல்வி, பாலங்களை பராமரித்தல் என பல செலவினங்களுக்காக மத்திய அரசு 1576 கோடி ரூபாயை தர வேண்டியுள்ளது. அதனை விரைவில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பொதுவிநியோகத் திட்டம், உரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதை அவர் எதிர்த்திருக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும், நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கு உதவி தேவை, கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு 50 சதவீத செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும என்றும் அவர் கோரினார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.
சென்னை பெங்களூர் இன்டஸ்ட்ரியல் காரிடார், தென்தமிழக மாவட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு போன்றவை தேவை, அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப உரிமம் வழங்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த அனுமதி, அலுவல் மொழியாக தமிழை ஆக்க வேண்டும், பஹ்ரைனில் பணியாற்றும் 18 இந்திய மீனவர்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர், அவர்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் உதவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் ஜெயலலிதா சமர்ப்பித்த 28 பக்க மனுவில் இடம்பெறுகின்றன.
« PREV
NEXT »