Latest News

May 01, 2014

ஸ்வாதிக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்… அதற்குள் குண்டு வெடிப்பில் பலியான சோகம்
by admin - 0

ஸ்வாதி குண்டூரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - காமாட்சி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். இவரது தாயார் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பலியான ஸ்வாதிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த ஜனவரி மாதம் தான் முதல் சம்பளத்தை வாங்கினாராம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த பெங்களூர்-குவகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்ததில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி(22) என்ற பெண் பலியானார். அவர் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

விடுமுறையை குண்டூரில் கழிக்க பெங்களூரில் குவகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் ஸ்வாதி. அவர் தட்கலில் டிக்கெட் எடுத்துள்ளார்.

ஸ்வாதி நேற்று மாலை எனக்கு போன் செய்து ரயில் ஏறிவிட்டதாக தெரிவித்தாள். அவள் பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் புரோகிராமராக வேலை பார்த்தாள் என்றார் ஸ்வாதியின் பாட்டி ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி ஸ்காலர்ஷிப் மூலம் கல்வியை முடித்தாள். படிப்பில் அவள் கெட்டிக்காரி. அவள் பி.டெக் படித்த முடித்தவுடன் வேலை கிடைத்தது. நாங்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவள் தான் எங்கள் நம்பிக்கையாக இருந்தாள் என்றார் ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருக்கு சென்று அங்குள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அவள் அங்கு மகிழ்ச்சியாக வேலை பார்த்தாள். அவளுக்கு பெங்களூர், அங்குள்ள மக்கள் மிகவும் பிடித்திருந்தது. அவள் தினமும் எங்களுக்கு போன் செய்து பேசுவாள் என்று பேத்தி பற்றி தெரிவித்தார் ராஜலக்ஷ்மி.

ஸ்வாதி கடந்த ஜனவரி மாதம் தான் முதல் சம்பளத்தை வாங்கினாள். கடந்த 2 மாதங்களாக குண்டூருக்கு வர திட்டமிட்டு நேற்று தான் கிளம்பினாள். அவள் இன்று மாலை குண்டூரை அடைய வேண்டும். அவளுக்காக நாங்கள் வீட்டில் அவள் விரும்பி சாப்பிடுவதை தயாரித்து வைத்தோம் என்று ராஜலக்ஷ்மி கூறினார்.

நடந்ததை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம்? அவள் என்ன தவறு செய்தாள். அவளை ஏன் கொன்றார்கள்? அவள் ஒரு அப்பாவி பயணி என்றார் பாட்டி.

சம்பவம் நடந்த ரயிலில் ஸ்வாதியின் சீட்டுக்கு அடியில் தான் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




« PREV
NEXT »