Latest News

May 24, 2014

காட்டுக்குள் அல்லலுறும் பிஞ்சுகள்! கிளி.புதுக்காடு அழகாபுரி மக்களை சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை -
by admin - 0

கிளிநொச்சி இராமநாதபுரம், புதுக்காடு அழகாபுரி கிராமத்தை சேர்ந்த நிரந்தர காணியற்ற 15இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது எதிர்கால நலன்கருதி அருகிலுள்ள காடுகளை வெட்டி தமக்கான காணி வதிவிடங்களை உருவாக்கி வாழ முற்பட்டு வருகின்றனர்.
இந்த மக்கள் தமது சிறிய குழந்தைகளுடன் போக்குவரத்து, குடிநீர் என பல்வேறு தேவைகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெற்று தம் வாழ் நாட்களை ஓட்டி வருகின்றனர்.
இவர்களால் காடுவெட்டி உருவாக்கப்பட்ட இந்த காணிகளுக்கு தற்போது வீட்டுத்திட்டம் பெற அனுமதி கிடைத்துள்ளபோதும் அவர்களுக்கு வன இலாகா துறையால் தடை ஏற்பட்டுள்ளதாக மிகுந்த சோகத்துடன், அங்கு சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் தமக்கு நேர்ந்துள்ள அவலநிலையை தெரிவித்துள்ளனர்.
போரால் மிகமோசமாக பாதிக்கப்பட்டு தற்போது மிகுந்த வறுமையின் மத்தியில் வாழும் இந்த மக்கள், தமது உடலுழைப்பை பயன்படுத்தி ஆக்கியுள்ள காணிகளில் கிடைக்க இருக்கும் வீட்டுத்திட்டம் கிளிநொச்சி வன இலகாவின் சில அதிகாரிகளின் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கையால் தடைப்பட்டு தமது பிள்ளைகளின் எதிர்காலம் சூனியமாகிவிடுமோ என மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்திலெடுத்த பா.உறுப்பினர் சி.சிறீதரன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மனிதாபிமான அடிப்படையில் இந்த மக்கள் வாழ வழி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
வன்னிப் பகுதியிலும் அதிகமான வனப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கொத்தளங்கள், விடுதிகள், பாசறைகள் தொடர்பாக வன இலாகாவின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்பதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய நிலையிலும், தற்போதைய சூழல் இருக்கின்றது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
காட்டுக்குள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களை பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன், கரைச்சி பிரதேசபை உறுப்பினர் சுவிஸ்கரன் கிராம அமைப்பு பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.



« PREV
NEXT »