இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்து அதன் மூலம் இலங்கையை விசாரணைப் பொறியில் சிக்க வைப்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் திட்டமாக அமைந்துள்ளது.
நோபள் பரிசு வென்ற கொபி அனானை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்தால், அவருக்கு வீசா வழங்க இலங்கையினால் மறுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த இந்த இடங்களுக்கு மட்டுமே விஜயம் செய்ய முடியும் என தடைகளை விதிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொபி அனானுக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அது ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலைமையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடுகள் கூட இலங்கையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொபி அனான் 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
தென் ஆபிரிக்காவின் நிற வெறிக்கு எதிராகவும் மத்திய கிழக்கு நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டவும் கொபி அனான் ஆற்றிய பங்களிப்பு இன்னமும் உலக அளவில் புகழப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை தலைவராக நியமித்து அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் திட்டத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons