Latest News

May 30, 2014

வேள்வி நடத்தும் பக்தர்களே! நாம் மாமிசம் புசிப்பதில்லை
by admin - 0

வேள்வி நடத்தும் எமது அருமைப் பக்தர்களுக்கு இக் கடிதத்தின் கீழ் கையயாப்பம் இடும் வைரவர், காளி, வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் கூட்டாக இணைந்து எழுதும் அன்பு மடல் இது.

முதலில் உங்களின் பக்திக்கும் தாளாத அன்புக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும்.

உங்கள் அன்பின் வெளிப்பாடுகண்டு நாம் அகமகிழ்ந்தாலும் எங்கள் பெயரால் நீங்கள் வெட்டுகின்ற கடாக்களும் சேவல்களும் படுகின்ற வேதனை கண்டு, நாங்கள் கண்ணீர் விடாத நாளில்லை.

நீங்கள் அன்பாக வளர்த்த கடாக்களின் கழுத்தை வாளால் வெட்டும்போது, உங்களில் ஒருவரை வெட்டுவதுபோல நீங்கள் உணரவில்லையா? அதோ எங்கள் முன் நீங்கள் வெட்டிச் சரித்த ஆட்டுக் கடா மலைபோல வீழ்ந்து கிடக்கிறது. ஒருகணம் அதன் வாழ்வை நினைத்துப் பாருங்கள்.

ஆட்டுக் குட்டியாக அது துள்ளித் திரிந்தபோது நீங்கள் அதனைக் கட்டி அணைத்துத் தூக்கி முத்தமிட்ட அந்த அன்பு இருக்கிறதே அது எல்லை கடந்த இன்பமயமானது.

நீங்கள் ஆட்டுக்குட்டி மீது காட்டிய பாசத்தின்போது உங்கள் மீது நாங்கள் காட்டிய கருணையே கருணை.

இத்துணை செல்லமாக பெயர் சூட்டி வளர்த்த ஆட்டுக் கடாவை ஏன்தான் ஒரு வெட்டில் வீழ்த்துகிறீர்கள்?

அன்புக்குரிய பக்தர்களே! நீங்கள் சைவ சமயத்தவர்கள். சைவம் என்றால் என்ன? சைவத்தின் எதிர்க்கருத்து அசைவம்.

இந்த உலகில் சமயங்களுக்கு எதிர்ப்பொருள் உண்டா? கிறிஸ்தவத்துக்கு, பெளத்தத்திற்கு, இஸ்லாமியத்திற்கு என எந்தவொரு சமயத்திற்குமே எதிர்ச் சொல் கிடையாது.  

ஆனால் சைவத்திற்கு மட்டுமே அசைவம் என்ற எதிர்ப்பொருள் உண்டு.
அப்படியானால் மாமிசம் புசிக்காத, கொலைகள் புரியாத, மற்றுயிர்க்குத் தீங்கு இழைக்காத தன்மையே சைவமாகும்.

ஆக, மாமிசம் புசிக்கின்ற எவரும் சைவசமயியாகமாட்டார்கள்.

நிலைமை இதுவாக இருக்கையில், நேர்த்திக் கடன் என்ற பெயரில் நடத்தப்படும் வேள் வியில் ஆயிரக்கணக்கான கடாக்களை வெட்டிச் சரித்து எங்களுக்குப் படைப்பது மகா பாவச் செயல்.

அறியாமை காரணமாகவும் எங்கள் மீது நீங்கள் கொண்ட அளவு கடந்த பக்தி காரண மாகவும் நீங்கள் இத்தவறைத் தொடர்ந்து செய்கிறீர்கள். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆடு வளர்ப்பு உங்கள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு தொழில் முயற்சி.

வேள்வி என்ற பெயரால் ஒரு சில மணித்தியாலங்களில் நல்லினக் கடாக்களை வெட்டிச் சரிப்பதானது உங்கள் தொழில் முயற்சியை வெட்டிச்சரிப்பது போன்றது.

எனவே நாங்கள் மாமிசம் உண்ணாத காத்தல் கடவுளர்கள்.

உங்கள் அன்பு ஒன்றே போதும். எங்கள் காவலும் கருணையும் உங்கள் மீது என்றும் நிலைக்கும்.

ஆகையால் எமதருமைப் பக்தர்களே! வேள்வியில் மிருகபலி வேண்டவே வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்பே சிவம்
இவ்வண்ணம்
வைரவர், வீரபத்திரர், காளி, ஐயனார்.  
« PREV
NEXT »